துருக்கி அதிபர் மனைவியை சந்தித்த நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு


துருக்கி அதிபர் மனைவியை சந்தித்த நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Aug 2020 12:53 AM GMT (Updated: 19 Aug 2020 12:53 AM GMT)

துருக்கி அதிபர் மனைவியை சந்தித்த நடிகர் அமீர்கானுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹாலிவுட்டில் 1994-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் பாரஸ்ட் கம்ப். இதில் டாம் ஹேங்க்ஸ், ராபின் ரைட், கேரி சினிஸ் உள்பட பலர் நடித்து இருந்தனர். 6 ஆஸ்கார் விருதுகளை வென்றது. இந்த படம் அமீர்கான் நடிக்க ‘லால் சிங் சத்தா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் விஜய் சேதிபதி, கரீனா கபூர் ஆகியோரும் நடிக்கின்றனர். அத்வைந்த் சந்தன் இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஊரடங்குக்கு முன்பே முடிந்து விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக அமீர்கான் உள்ளிட்ட படக்குழுவினர் துருக்கி சென்றுள்ளனர். அங்கு இஸ்தான்புல் நகரில் துருக்கி அதிபரின் மனைவி எமினி எர்டோகனை அமீர்கான் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை எமினி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “புகழ்பெற்ற இந்திய நடிகர் அமீர்கானை சந்தித்தது மகிழ்ச்சி” என்று பதிவிட்டு இருந்தார். இதையடுத்து அமீர்கானுக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. துருக்கி பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் நாடு. பாகிஸ்தானுக்கு நட்பு நாடாகவும் உள்ளது. காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கியதை எதிர்த்தது. அந்த நாட்டின் அதிபரின் மனைவியை அமீர்கான் எப்படி சந்திக்கலாம் என்று கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Next Story