சினிமா செய்திகள்

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. பூரண குணமடைய இலங்கையில் தமிழ் கலைஞர்கள் கூட்டு பிரார்த்தனை + "||" + Collective prayers of Tamil artists in Sri Lanka for complete recovery of Playback singer SPB

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. பூரண குணமடைய இலங்கையில் தமிழ் கலைஞர்கள் கூட்டு பிரார்த்தனை

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. பூரண குணமடைய இலங்கையில் தமிழ் கலைஞர்கள் கூட்டு பிரார்த்தனை
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலம் பூரண குணமடைய இலங்கையில் தமிழ் கலைஞர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னை,

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 16 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பொதுமருத்துவம், இருதய நோய், நுரையீரல், தொற்றுநோய் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ள மருத்துவ குழு அமைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதேபோன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகினர் அவரவர் வீட்டிலேயே பங்கேற்கும் கூட்டு பிரார்த்தனை கடந்த வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தும் அறிக்கை மூலம் “பாடும் நிலா பாலு. எழுந்து வா, கூட்டு பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பியை மீட்டெடுப்போம்” என்று அழைப்பு விடுத்து இருந்தார்.

இதில், நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், பாடகர்கள் அவரவர் வீடுகளில் பிரார்த்தனை செய்தனர்.

ரசிகர்கள், தங்கள் வீட்டின் வாசலிலும், மாடியிலும் நின்று பிரார்த்தனை செய்தனர்.  இதுபோல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி முன்பும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ, செயற்கை சுவாசம் ஆகியவற்றின் மூலம் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் பூரண குணமடைய வேண்டி, கொழும்பு ஸ்ரீ பொன்னம்பல வாணேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  இந்த பிரார்த்தனையில் தமிழ் கலைஞர்கள் சந்திரசேகர், சுருதி பிரபா, எம்.சிவகுமார், டிலுக்சி, பிரேம் ஆனந்த், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையை தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது.