மாணவ-மாணவிகளுக்கு ரூ.3½ கோடி கல்வி உதவி நடிகர் சூர்யா அறிக்கை


மாணவ-மாணவிகளுக்கு ரூ.3½ கோடி கல்வி உதவி நடிகர் சூர்யா அறிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2020 12:00 AM GMT (Updated: 31 Aug 2020 7:08 PM GMT)

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

நடிகர் சூர்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பொதுமக்கள், ‘திரைத்துறையினர், ‘கொரோனா தொற்றிலிருந்து’ மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள், ‘கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலும் திரையுலகைச் சார்ந்த வினியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி, கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். குடும்பத்திலிருந்து ஒரு மாணவ, மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும். அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் பவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

Next Story