கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பு


கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2020 12:29 AM GMT (Updated: 9 Sep 2020 12:29 AM GMT)

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

“அரசாங்கத்தின் அனுமதியோடு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கடிதத்தில் குறிப்பிட்ட எங்கள் விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் எங்களால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சிறிய தொகை முதல் 60 அல்லது 70 கோடி வரை ஷேர் வரும் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோல் வருமா என்பது இயலாத காரியம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களது படங்களை திரையரங்குகளில் திரையிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே சில முடிவுகள் எடுக்க வேண்டுகிறேன். 10 வருடங்களாக கியூப், விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்தி வந்தோம். இனிமேல் இந்த கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது. திரையரங்கு ஷேர் விகிதங்கள் 50, 40, 30 என்பது மிகவும் குறைவு என்பதால் தியேட்டர்களை திறக்கும் முன்பு இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி தர வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென்று நிறுத்துவதையும் தரமான படங்களை “பிக்கப்” ஆவதற்கு வாய்ப்பளிக்காமல் மறுப்பதையும் தவிர்க்க வேண்டும். கன்பர்மேஷன் என்ற பெயரில் எடுத்து நடத்தும் தியேட்டர்களுக்கு படங்கள் கொடுக்க மாட்டோம். இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



Next Story