எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையா? எஸ்.பி.பி.சரண் மறுப்பு + "||" + Lung Transplant Surgery for SB Balasubramaniam? SBP Saran Denial
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையா? எஸ்.பி.பி.சரண் மறுப்பு
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோவில் பேசியிருக்கிறார்.
சென்னை,
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:-
“அப்பாவின் உடல்நிலை மெதுவாக தேறி வருகிறது. அப்பாவை தினமும் சந்திக்கிறேன். செயற்கை சுவாசம், எக்மோ கருவிகள் உதவியுடன் ஆரோக்கியமாக இருக்கிறார். எல்லாம் சுமுகமாக உள்ளது. சிக்கல் எதுவும் இல்லை. அப்பாவின் உடல்நிலை குறித்த செய்திகளை நான் வெளியிட்டு வருகிறேன். இதை தவிர்த்து வேறுவிதமாக பரவும் செய்திகள் எதையும் நம்ப வேண்டாம். அப்பா வீடு திரும்பி விட்டார் என்றும், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கப்போகிறது. இதற்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்றும் ஒரே நாளில் இரண்டு செய்திகள் வந்தன. இவை எதுவும் உண்மை இல்லை.
இந்த செய்திகள் குடும்பத்தினருக்கு எவ்வளவு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தவறான செய்தியால் எங்களுக்கு காலையில் இருந்து இரவு வரை நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதற்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது. அப்பாவின் உடல்நிலை குறித்து அறிய ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டியது முக்கியம் என்பதை உணருங்கள். அப்பா மயக்க நிலையில் இல்லை, விழிப் போடு இருக்கிறார். அனைவரின் பிரார்த்தனையோடு விரைவில் குணமாகி விடுவார்.” இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.