வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 Sep 2020 8:19 PM GMT (Updated: 11 Sep 2020 8:19 PM GMT)

வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வருமான வரித்துறை முதன்மை ஆணையர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2011-2012-ம் நிதி ஆண்டு ரூ.15 கோடியே 98 லட்சத்து 4 ஆயிரத்து 15 வருமானம் என்று கூறி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அவற்றை 2014-ம் ஆண்டு ஆய்வு செய்த போது, அந்த நிதியாண்டில் அவருக்கு ரூ.18 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரத்து 808 வருமானம் கிடைத்திருப்பது தெரியவந்தது.

அதாவது லண்டனில் உள்ள ‘லிபரா மொபைல்’ நிறுவனத்துக்கு சிறப்பு ‘ரிங் டோன்’ இசையமைத்து கொடுப்பதற்கு ரூ.3 கோடியே 47 லட்சத்து 77 ஆயிரத்து 200 பெற்றுள்ளார். இந்த தொகையை தன்னுடைய ‘ஏ.ஆர்.ரகுமான் அறக்கட்டளை’யின் பெயரில் பெற்றுள்ளார். இசை அமைத்து கொடுத்ததற்கு ஒரு கலைஞராக அவர் பெற்ற இந்த தொகை வருமானமாகத்தான் கருத வேண்டும்.

தொழில் கட்டணமாக பெற்ற இந்த தொகையை 2011-2012-ம் ஆண்டு வருமானமாக கணக்கிடப்பட்டது. இதை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், “அறக்கட்டளைக்கு நன்கொடையாக இந்த தொகையை பெற மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதால், இந்த தொகைக்கு வரி விதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அறக்கட்டளைக்கு பெற்ற நன்கொடை தொகையை வருமானமாக கணக்கிட உத்தரவிட்டு, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், ஏ.ஆர்.ரகுமான் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story