ஆட்சிக்கு எதிராக விமர்சனம்; கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்


ஆட்சிக்கு எதிராக விமர்சனம்; கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 12 Sep 2020 12:43 AM GMT (Updated: 12 Sep 2020 12:43 AM GMT)

ஆட்சிக்கு எதிராக விமர்சனம் செய்த கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நடிகை கங்கனா ரணாவத் மராட்டிய சிவசேனா அரசையும் மும்பை போலீசையும் கடுமையாக சாடி வருகிறார். இதனால் அவரது பங்களா இடிக்கப்பட்டது. இதையடுத்து மறைந்த பால்தாக்கரேவின் மகனும் மராட்டிய முதல் மந்திரியுமான உத்தவ் தாக்கரேவை கண்டித்து டுவிட்டரில் கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள பதிவில்,

“உங்கள் தந்தை நல்லது செய்தார். அதன்மூலம் உங்களுக்கு சொத்துகள் வரலாம். ஆனால் மரியாதையை சம்பாதிப்பது உங்களிடம்தான் இருக்கிறது. எனது வாயை நீங்கள் மூடிவிடலாம். ஆனால் கோடிக்கணக்கானோர் மூலம் எனது குரல் ஒலிக்கும். அத்தனைபேரின் வாயை உங்களால் மூடமுடியாது. அடக்கவும் முடியாது. உண்மையிடம் இருந்து தப்பிக்கவும் முடியாது. மன்னராட்சிக்கு எடுத்துக்காட்டாக உங்கள் செயல்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

டுவிட்டரில் பகிர்ந்த இன்னொரு பதிவில் “பால்தாக்கரேவின் உறுதியான கொள்கையால் சிவசேனா தொடங்கப்பட்டது. அதிகாரத்துக்காக இப்போது அவரது கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். சிவசேனா சோனியா சேனாவாக மாறி விட்டது” என்று கங்கனா கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரேவை விமர்சித்ததை கண்டித்து மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கங்கனா ரணாவத் மீது புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.  மத கலவரத்தை தூண்டுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story