இணைய தளத்தில் பரபரப்பு விஷால், பா.ஜனதாவில் சேருகிறாரா?


இணைய தளத்தில் பரபரப்பு விஷால், பா.ஜனதாவில் சேருகிறாரா?
x
தினத்தந்தி 14 Sep 2020 12:19 AM GMT (Updated: 14 Sep 2020 12:19 AM GMT)

பா.ஜ.க.வில் இணையப்போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று நடிகர் விஷால் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் நடிகர் நடிகைகளை இழுத்து பிரசாரத்துக்கு பயன்படுத்த வியூகம் அமைக்கின்றன. சில தினங்களுzக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல் பரவியது. பா.ஜனதா பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராமும் சிவகார்த்திகேயன் விரும்பினால் பா.ஜனதாவில் இணையலாம் என்றார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் அந்த தகவல் உண்மை அல்ல என்று மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் பா.ஜனதாவில் சேரப்போவதாக நேற்று இணைய தளத்தில் புதிய தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஷாலுக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்த வேட்பு மனு கடைசி நேரத்தில் தள்ளுபடி ஆனது. சில தினங்களுக்கு முன்பு பா.ஜனதா தலைவர்கள் ஆதரவோடு மராட்டிய மாநில அரசையும் மும்பை போலீசையும் எதிர்த்து நிற்கும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு விஷால் ஆதரவு தெரிவித்து இருந்தார். இதை வைத்தே விஷால் பா.ஜனதாவில் இணைய உள்ளதாகவும் இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதனை விஷால் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “நான் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை‘’ என்றார். விஷால் மேலாளர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வதந்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை. பா.ஜனதா கட்சியில் சேர விஷால் நேரம் கேட்கவுமில்லை. அந்த கட்சியில் இணையப்போவதாக வெளியான தகவலில் உண்மையும் இல்லை“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story