சினிமா செய்திகள்

விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மீது புகார் + "||" + Bollywood director Karan Johar has been accused of using drugs at a party

விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மீது புகார்

விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மீது புகார்
விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மீது முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் சிர்சா புகார் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், பாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட சிலர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், தனது வீட்டில் பிரபலங்களுக்கு அளித்த விருந்தின் போது போதைப்பொருட்களை பயன்படுத்தினார் என்று டெல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் சிர்சா, போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் இது குறித்து தான் புகார் அளித்ததாகவும், தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக 2019 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் வீட்டில் வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை அவர் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருக்கும் பிரபலங்கள் தீபிகா படுகோனே, விக்கி கவுஷல், மலைக்கா அரோரா, வருண் தவான், அர்ஜுன் கபூர், மற்றும் ஷாஹித் கபூர் உள்ளிடோர் மீது தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ராகேஷ் அஸ்தானாவுக்கு தான் எழுதிய கடிதத்தை மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பிட்ட அந்த வீடியோவில் உள்ள பிரபலங்கள் அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் இருப்பது தெளிவாகியிருப்பதால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் அந்த வீடியோ குறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்த இயக்குனர் கரண் ஜோஹர், “தனது விருந்தில் யாரும் போதை மருந்து உட்கொள்ளவில்லை” என்று கூறியிருந்தார். மேலும் அந்த வீடியோவில் உள்ள பிரபலங்கள் அனைவரும் ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக தனது வீட்டில் கூடியிருந்ததாகவும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியிருந்தால் அந்த வீடியோவை வெளியிடும் அளவிற்கு தான் முட்டாள் அல்ல என்றும் கரண் ஜோஹர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.