சினிமா செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு : கமல் - ரஜினி - பிரபலங்கள் இரங்கல் + "||" + SB Balasubramaniam passes away: Kamal - Rajini - Celebrities mourn

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு : கமல் - ரஜினி - பிரபலங்கள் இரங்கல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு : கமல் - ரஜினி - பிரபலங்கள் இரங்கல்
எஸ்.பி.பி மறைவு - கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சென்னை

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வெகுசில பெரும் கலைஞர்களுக்கே தான் வாழும் காலத்திலேயே அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப்பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி.. நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தபடியே அவரை வழி அனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களின் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

அவர், நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்ததற்கு நன்றி. அவரின் குரலின் நிழல்பதிப்பாக பலகாலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேரு. பலமொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர், ஏழு தலைமுறைக்கு அவர் புகழ் வாழும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் உடனான தனது கலைப்பயணத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.


அவரது மறைவுக்கு ஏ. ஆர். ரஹ்மான், நடிகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி, அருண் விஜய், பிரசன்னா, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். தமிழ் திரையுலகைக் கடந்து மலையாள திரையுலகைச் சேர்ந்த நிவின் பாலி, பார்வதி உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என அனைவரும் எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.