சினிமா செய்திகள்

என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது?” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் + "||" + Vairamuthu mourns the death of SB Balasubramaniam

என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது?” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்

என் சங்கீத ஜாதிமுல்லை சருகாகிப் போகிறது: “நீ தூங்குமொரு தாலாட்டை எவர் பாடியது?” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்தனையோ

மகா கலைஞனே!

சுரப்பதை நிறுத்திக் கொண்டதா

உன் தொண்டை அமுதம்?

காற்று வெளியைக்

கட்டிப்போட்ட உன் நாவை


ஒட்டிப் போட்டதோ மரணப் பசை?

பாட்டுக் குயில் போனதென்று

காட்டுக் குயில்கள் கதறுகின்றன

ஒலிப்பதிவுக் கூடங்களெல்லாம்

ஓசை கொன்று எழுந்துநின்று

மவுனம் அனுஷ்டிக்கின்றன

மனித குலத்தின் அரைநூற்றாண்டின்மீது

ஆதிக்கம் செலுத்தியவனே!

மண் தூங்கப் பாடினாய்

மலர் தூங்கப் பாடினாய்

கண் தூங்கப் பாடினாய்

கடல் தூங்கப் பாடினாய்

நீ தூங்குமொரு தாலாட்டை

எவர் பாடியது?

மனிதர் பாடவியலாதென்று

மரணம் பாடியதோ?

பொன்மேடை கண்டாய்

பூமேடை கண்டாய்

இந்த உலக உருண்டையை

முப்பது முறை வலம் வந்து

கலைமேடை கண்டாய் என்

கவிமேடை கண்டாய்

கடைசியில் நீ

மண்மேடை காண்பது கண்டு

இடிவிழுந்த கண்ணாடியாய் நெஞ்சு

பொடிப்பொடியாய் போனதே பாலு

நாற்பது ஆண்டுகள் என் தமிழுக்கு

இணையாகவும் துணையாகவும் வந்தவரே!

இன்றுதான் என் பொன்மாலைப் பொழுது

அஸ்தமன மலைகளில் விழுகிறது

என் சங்கீத ஜாதிமுல்லை

சருகாகிப் போகிறது

என் இளைய நிலா

குழிக்குள் இறங்குகிறது

என் பனிவிழும் மலர்வனம்

பாலைவனமாகிறது

காதல் ரோஜாவே

கருகிப் போகிறது

என் வண்ணம்கொண்ட வெண்ணிலா

மரணக் கடலில் விழுந்துவிட்டது

மழைத் துளியை மறக்காத

சாதகப் பறவை போல்

உன்னை நினைத்தே நானிருப்பேன்

ரோஜாக்களை நேசிக்கும்

புல்புல் பறவை போல்

உன் புகழையே நான் இசைப்பேன்

முகமது ரபி-கிஷோர் குமார்

முகேஷ் - மன்னாடே - தியாகராஜ பாகவதர்

டி.எம்.சவுந்தரரராஜன் வரிசையில்

காலம் தந்த கடைசிப் பெரும் பாடகன் நீ

உன் உடலைக் குளிப்பாட்டுவதற்கு

கங்கை வேண்டாம்

காவிரி வேண்டாம்

கிருஷ்ணா வேண்டாம்

கோதாவரி வேண்டாம்

உலகம் பரவிய உன் அன்பர்களின்

ஜோடிக் கண்கள் வடிக்கும்

கோடித் துளிகளால்

குளிப்பாட்டப்படுகிறாய் நீ!

இதோ!

என்னுடையதும் இரண்டு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.