கொரோனா தொற்று காலத்தில் அமிதாப்பின் ‘குரோர்பதி’ படப்பிடிப்பு நடந்தது எப்படி?


கொரோனா தொற்று காலத்தில் அமிதாப்பின் ‘குரோர்பதி’ படப்பிடிப்பு நடந்தது எப்படி?
x
தினத்தந்தி 28 Sep 2020 11:15 PM GMT (Updated: 28 Sep 2020 7:59 PM GMT)

அமிதாப்பச்சன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்து போனது என்றால் அது உண்மை.

அமிதாப்பச்சன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்து போனது என்றால் அது உண்மை. காரணம், அவரது வயதும், அவரது உடல்நலத்தில் ஏற்கனவே இருந்துவரும் பல பிரச்சினைகளும்தான். ஆனாலும் அவர் மும்பை தனியார் ஆஸ்பத்திரியில் நேர்த்தியான சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக மீண்டார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அமிதாப், இப்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் பரபரப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவர் கலந்துகொண்டுள்ள படப்பிடிப்பு, அவர் சோனி டி.வி.யில் தொகுத்து வழங்கும் ‘டாக் ஷோ’வான ‘குரோர்பதி’தான் (கோன் பனேகா குரோர்பதி). இந்த நிகழ்ச்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனைபேரையும் வசீகரித்து இருக்கிறது.

இது, குரோர்பதி 12-வது சீசன்.

இந்த குரோர்பதியின் படப்பிடிப்பு எப்படித்தான் நடைபெறுகிறது என தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ உங்கள் பார்வைக்கு பல சுவாரசியமான தகவல்கள்:-

* படப்பிடிப்பு தளம் மும்பை பிலிம் சிட்டி. இங்கு ஒரு பெரிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

* கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய தனிமனித இடைவெளிக்கு ஏற்ப குரோர்பதி தொகுப்பு மற்றும் நிகழ்ச்சியின் வடிவம் என அத்தனையும் மொத்தமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

* இந்த குரோர்பதி நிகழ்ச்சி அறிமுகமாகி 20 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக நேரடியாக பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

* போட்டியாளர்கள் எண்ணிக்கை வழக்கமான 10-ல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ‘ஹாட் சீட்’ (அமிதாப் இருக்கை) மற்றும் போட்டியாளர்களின் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

* போட்டியாளர்கள் அமிதாப்பை தழுவவும், அவருடன் கை குலுக்கவும் விரும்புவது உண்டு. இப்போதோ அதற்கு அனுமதி இல்லை. அமிதாப் முழங்கையால் ஒரு ‘ஹாய்’ மட்டும் சொல்கிறார்.

* அமிதாப்பின் டெலிபிராம்ப்டர் அறையில், அவர் ஸ்கிரிப்டை வாசிக்கும் இடத்தில் ஒரு கண்ணாடி சுவர் உள்ளது. ஒரு புறம் அவர் இருக்கிறார். மறுபுறம் திரைக்கதாசிரியர் இருக்கிறார்.

* சுத்திகரிப்பு சுரங்கங்கள் உள்ளன. உடல்வெப்ப நிலையை, ஆக்சிஜன் அளவை பதிவு செய்ய டாக்டர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் தரவுகள் அடங்கிய தளமும் பராமரிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 4, 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு இடைவேளையின்போதும் ஒரு குழு சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுகிறது.

* படப்பிடிப்பு குழுவினரின் எண்ணிக்கை 300-ல் இருந்து 175 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இல்லை என்பதால், அவர்களுக்கான முழு பின்தளத்தில் படப்பிடிப்பு குழுவினரே உள்ளனர்.

* உணவை பெரும்பாலோர் வீட்டில் இருந்தே எடுத்து வந்து விடுகின்றனர். ஆனாலும், உணவு வழங்கும் அறையும், பரிமாறுபவரும் உண்டு. குறைவான எண்ணிக்கையிலானவர்களே அங்கு சாப்பிடுகின்றனர்.

* முன்பு அமிதாப் அணியும் ஸ்டைலான உடைகளின் துணி இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்து மும்பையில் தைக்கப்பட்டன. இப்போது இந்திய உடைகளே பாதுகாப்பானது என கருதி, அவையே பயன்படுத்தப்படுகின்றன. அந்த உடைகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட்ட பின்னர்தான் அமிதாப் அணிந்து கொள்கிறார்.

இத்தனை மாற்றங்களுடன், கட்டுப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள ‘குரோர்பதி’ நேற்று முதல் சோனி டி.வியில் ஒளிபரப்பாகத்தொடங்கி இருக்கிறது.

Next Story