சினிமா செய்திகள்

எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன; எஸ்பிபி சரண் விளக்கம் + "||" + After rumours on SP Balasubrahmanyam’s treatment cost spread, his son SPB Charan clears the air

எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன; எஸ்பிபி சரண் விளக்கம்

எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன; எஸ்பிபி சரண் விளக்கம்
எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னை

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். செப்டம்பர் 26-ம் தேதி அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக வீடியோ ஒன்றை எஸ்பிபி சரண் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

எஸ்பிபி சரண் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:

"அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து பல வதந்திகள் உலவி வருகின்றன. அப்பாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. என் அப்பாவை அவ்வளவு அருமையாகப் பார்த்துக் கொண்டார்கள். தினமும் பிரஸ் ரிலீஸ் கொடுப்பதிலிருந்து, அப்பாவுக்குச் சிகிச்சை அளித்தது வரை அனைத்துமே என்னிடம் கேட்டுவிட்டுத்தான் செய்தார்கள்.

மருத்துவமனை கட்டணம் தொடர்பாக ஒரு சர்ச்சை வந்திருக்கிறது. சிகிச்சை பலனளிக்காமல் அப்பா காலமாகிவிட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குக் கொஞ்சம் நேரம் கூடக் கொடுக்காமல், தினமும் ஏதேனும் ஒரு பிரச்சினை வந்து கொண்டிருக்கிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

'மருத்துவக் கட்டணம் அதிகமாக இருந்தது. எங்களால் கட்ட முடியவில்லை, தமிழக அரசிடம் பேசினோம். சரியான பதில் வராத காரணத்தால் குடியரசுத் துணைத் தலைவரிடம் பேசியிருந்தேன். அவருடைய மகள்தான் இந்த மருத்துவக் கட்டணத்தைக் கட்டினார்' என்ற ஒரு அருமையான கதை வந்தது. அந்தக் கதை ரொம்ப வைரலாகப் பரவிவிட்டது.

முதலில் மருத்துவமனையில் என்ன கட்டணம் கூறினார்களோ, அதில் ஒரு பங்கை நாங்கள் கட்டிக்கொண்டே வந்தோம். அதில் இன்னொரு பகுதி இன்சூரன்ஸ் வந்தது. அப்பா காலமானவுடன் மருத்துவக் கட்டணம் இன்னும் எவ்வளவு உள்ளது என்று மருத்துவர்களிடம் கேட்டேன். சிஇஓவிடம் பேசவில்லை. மருத்துவர் தீபக் எனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம்தான் பேசினேன்.

கடைசி நாள் எங்களுடைய கணக்காளர் மற்றும் பணத்துடன்தான் இங்கு வந்திருந்தோம். ஆனால், மருத்துவமனை சேர்மன் எங்களிடமிருந்து எந்தவொரு காசும் வாங்க வேண்டாம் என்று கூறியிருப்பதாகச் சொன்னார்கள். எவ்வளவு சீக்கிரமாக, சுமுகமாக அப்பாவை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக முடியுமோ அதைச் செய்து கொடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

அப்போது நான், "அப்படியென்றால் அப்புறமாக வந்து செட்டில் செய்யட்டுமா" என்று கேட்டேன். "பணம் சம்பந்தமாக இனிமேல் எதுவும் பேசாதீர்கள்" என்றார்கள். இதுதான் நடந்த விஷயம். இதற்கு எங்கள் குடும்பத்தினர் அனைவருமே நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்களால் பணம் அளிக்க முடியாமல் இல்லை. தமிழக அரசிடமும் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டிருந்தோம். அவர்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியிருப்பதாகத் தகவல் வந்தது.

எப்போது சேர்மன் மருத்துவக் கட்டணம் தொடர்பாக இந்த முடிவை எடுத்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது. வீட்டுக்கு அப்பாவை எடுத்துக் கொண்டுபோக தாமதம் ஆனதற்கு இதுதான் காரணம் என்ற கதையெல்லாம் வந்தது.

அப்பா காலமான நேரம் முதற்கொண்டு ஊடகத்திடம் சொல்லியிருக்கிறேன். பல கதைகள் வெளியாகி தேவையில்லாத பிரச்சினைகள். எதிர்பார்க்காத மறைவு. அதை ஜீரணிக்கக் கொஞ்சம் நேரம் தேவை. எங்களுடைய குடும்பம் இதிலிருந்து மீண்டு வர நிறைய நேரம் தேவைப்படுகிறது". இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்தார்.

மேலும், நினைவு இல்லம் தொடர்பாக, "அப்பாவுக்கு நினைவு இல்லம் கட்ட வேண்டும் எனத் தோன்றியது. அதைப் பிரம்மாண்டமான இல்லமாகப் கட்ட வேண்டும் என்பது என் ஆசை. என் சக்தியால் என்ன பண்ண முடியுமோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். முயற்சி செய்வேன்" என்று எஸ்பிபி சரண் கூறினார்.