சினிமா செய்திகள்

'800' திரைப்பட விவகாரத்தில் நடிகர் விவேக் கருத்து + "||" + Actor Vivek comments on '800' movie

'800' திரைப்பட விவகாரத்தில் நடிகர் விவேக் கருத்து

'800' திரைப்பட விவகாரத்தில் நடிகர் விவேக் கருத்து
மக்களால் விரும்பப்படுவோர், மக்கள் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று '800' திரைப்பட விவகாரத்தில் நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்தவர் என்பதால் படத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். சமீபத்தில் நடைபெற்ற சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். ஆட்டத்தின்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில், 2021 இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 800 படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் காட்சிகள் இடம்பெறாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 

உங்களுடைய பார்வை தான் என்னுடைய பார்வை. என்னிடம் கருத்து கேட்கும் அளவுக்கு நான் பெரிய மனிதன் கிடையாது. இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர்கள், மக்கள் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்  எனத் தெரிவித்தார்.