“என் படத்தை திருட்டு வீடியோ எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்”- டைரக்டர் ரமேஷ் செல்வன் உருக்கம்


“என் படத்தை திருட்டு வீடியோ எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்”- டைரக்டர் ரமேஷ் செல்வன் உருக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2020 12:00 AM GMT (Updated: 16 Oct 2020 8:13 PM GMT)

என் படத்தை திருட்டு வீடியோ எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று தமிழ் ராக்கர்ஸ்சுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார், டைரக்டர் ரமேஷ் செல்வன்.


என் படத்தை திருட்டு வீடியோ எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று தமிழ் ராக்கர்ஸ்சுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார், டைரக்டர் ரமேஷ் செல்வன்.

தமிழகத்தை உலுக்கிய ஒரு இளம்பெண்ணின் கொலை வழக்கை கருவாக வைத்து உருவான படம், ‘சுவாதி கொலை வழக்கு.’ இந்த பெயருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் பெயர், ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றப்பட்டது.

இதுபற்றிய அனுபவங்களை டைரக்டர் ரமேஷ் செல்வன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

“இரண்டரை வருட போராட்டத்துக்குப்பின், ‘நுங்கம்பாக்கம்’ படம் திரைக்கு வரயிருக்கிறது. கஜினிமுகமதுவை விட, அதிக போராட்டத்தை சந்தித்தேன். ஒரு மோசமான கருத்தை சொல்லும் படத்தை எடுத்தால் சுலபமாக ஜெயித்து இருக்கலாம். ஒரு நல்ல கருத்துள்ள படத்தை எடுத்ததால், இவ்வளவு கஷ்டம்.

இந்த படத்தின் ‘டீஸர்’க்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுவே வியாபாரத்துக்கு வழிகாட்டியது. படத்தை வெளியிடக் கூடாது என்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்தார். படத்தின் இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று தணிக்கை குழுவினரிடம் போய் போலீசார் கேட்டனர். நான் பெங்களூருவில் போய் ஒளிந்து கொண்டு ஜாமீன் கிடைத்தபின், சென்னைக்கு வந்தேன்.

நான், 7 படங்களை டைரக்டு செய்தவன். ஆனால் போலீஸ், என்னை 10 கொலைகளை செய்தவன் போல் நடத்தினார்கள். என் ஆபீஸ் பையன் உள்பட 24 பேர்களிடம், என்னைப் பற்றி விசாரித்தார்கள். அந்த காட்சியை நீக்கு...இந்த காட்சியை நீக்கு...என்று நச்சரித்தார்கள். படத்தின் உச்சக்கட்ட காட்சியை மாற்ற சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை.

என் மீது வழக்கு போட்டார்கள். அதையும் சமாளித்து படத்தை திரைக்கு கொண்டுவரும் வேளையில், கொரோனா பிரச்சினை வந்துவிட்டது. அடுத்த வாரம் படம் திரைக்கு வரயிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ்சுக்கு ஒரு வேண்டுகோள். என் படத்தை திருட்டு வீடியோ எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால், நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் ரமேஷ் செல்வன் கூறினார்.

Next Story