முரளிதரன் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம்


முரளிதரன் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 12:23 AM GMT (Updated: 19 Oct 2020 12:23 AM GMT)

முரளிதரன் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம் எழுந்துள்ளது.


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. டாக்டர் ராமதாஸ், சீமான், வைகோ, பாரதிராஜா, வைரமுத்து, தாமரை உள்ளிட்ட பலர் கண்டித்தனர். தற்போது நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “முத்தையா முரளிதரன் சுழல் பந்தை ஒத்தையா எதிர்கொள்ளும் விசய சேதுபதி.. எதிர்ப்புகள் எதிர்பார்ப்புகளாக பவுன்ஸ் ஆகி வரும் பந்தினை லாவகமாக அடித்து பவுண்டரியை தாண்டி சிக்சராக விளாசி (அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என அறிவித்து) அனைவரையும் ஆடவைத்து, ஆரவாரத்துடன் தமிழ்மக்கள் செல்வன்(ந்தர்) ஆகிவிடும் வியூகமோ? என்பதென் யூகம். நன்மையே நடக்கும் என்று நம்புவோம்” என்று கூறியுள்ளார்.

டைரக்டர் சீனுராமசாமி கூறும்போது, “எழுதி நூலாக வெளிவராத ஒரு பயோகிராபியை எப்படி சந்தேகிக்காமல் இருப்பார்கள். கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் உரிமை சில நேரங்களில் அது சாத்தியப்படாது. குஷ்பு முன்பு மணியம்மையாக நடித்தார். இப்போது நடிக்க முடியுமா? இந்த பிரச்சினையில் இயக்குனர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் தீர்வு காண வேண்டும்” என்றார். முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடித்தால் அவரது வீட்டின் முன்னால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

Next Story