இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகை ஜரீனா ரோஷன் கான் தனது 54வது வயதில் காலமானார்.
புதுடெல்லி,
இந்தியில் கும்கும் பாக்யா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜரீனா ரோஷன் கான். அவருக்கு வயது 54. இந்த நிகழ்ச்சியில் இந்து தாதி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் சிகிச்சை எடுத்து கொண்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதுபற்றி அவருடன் நடித்து வந்த முன்னணி நடிகர்களான ஷபீர் ஆலுவாலியா மற்றும் ஸ்ரீதி ஜா ஆகியோர் ஜரீனாவுடனான செல்பி புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.
கும்கும் பாக்யா தவிர்த்து, ஏ ரிஷ்டா கியா கெஹ்லாடா ஹை என்ற பிரபல நிகழ்ச்சியிலும் ஜரீனா கான் நடித்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தொடங்கிய கும்கும் பாக்யா தொடரானது இன்னும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து ஜரீனா நடித்து வருகிறார்.