“விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல” - நடிகர் ராஜ்கிரண் அறிக்கை


“விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல” - நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
x
தினத்தந்தி 22 Oct 2020 12:15 AM GMT (Updated: 22 Oct 2020 12:15 AM GMT)

விஜய் சேதுபதி மகள் மீது வன்மம் காட்டுவது, தமிழர் பண்பு அல்ல என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.


நடிகர் ராஜ்கிரண் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“தம்பி விஜய் சேதுபதி ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர். நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப் பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம். அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்போது அதில் இருந்து விலகி விட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது, தமிழரின் பண்பும் அல்ல.

தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது. தமிழ் பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம்தான். அதற்காக தரம் தாழ்ந்து அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பது ஈனத்தனமானது.

தமிழ் உணர்வைவிட, மனிதநேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்களுக்கு இது புரியும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.

டைரக்டர் அமீர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“800 எனும் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிக்கொண்டார் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் அவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாகவும், அவரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடும், அவரின் மகளை தவறாக பேசியும், மிரட்டும் பாணியிலும் சிலர் பொதுவழியில் கருத்துகளை பதிவிட்டிருப்பது அநாகரிகத்தின் உச்சம் என்றும், அநீதியான செயல் என்றும் வன்மையாக கண்டிக்கிறேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் இன்னொரு முறை இம்மண்ணில் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கம் மற்றும் காவல் துறையின் தலையாய கடமை.”

மேற்கண்டவாறு டைரக்டர் அமீர் கூறியிருக்கிறார்.

Next Story