பட அதிபர்கள் சங்க தேர்தல்: டி.ராஜேந்தருக்கு, எஸ்.தாணு ஆதரவு


பட அதிபர்கள் சங்க தேர்தல்: டி.ராஜேந்தருக்கு, எஸ்.தாணு ஆதரவு
x
தினத்தந்தி 31 Oct 2020 11:53 PM GMT (Updated: 31 Oct 2020 11:53 PM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், 3 ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில், ஓட்டுப்போட தகுதியான உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,307 பேர்.

இந்த சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஓட்டுப்பதிவு, சென்னை அடையாரில் உள்ள சத்யா ஸ்டூடியோவில், நவம்பர் 22-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 4 மணி வரை நடக்கிறது.

சங்கத்தின் தலைவர் பதவிக்கு டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பட அதிபர் பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். டி.ராஜேந்தர், முரளி ஆகிய இரண்டு பேர் அணிகள் சார்பில் மற்ற பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. 2 அணிகளும், “தயாரிப்பாளர்களின் நலன்களுக்காக பாடுபடுவோம்” என்பதை பொதுவான வாக்குறுதியாக தயாரிப்பாளர்களின் முன்வைத்து இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில், டி.ராஜேந்தருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.தாணு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர், டி.ராஜேந்தருக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

Next Story