பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது


பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
x
தினத்தந்தி 28 Nov 2020 12:24 AM GMT (Updated: 2020-11-28T05:54:44+05:30)

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

சென்னை, 

விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை.

சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. அந்தப் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படமும், ஓ.டி.டி.யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இதில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார். படத்துக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் அரசு அனுமதியை ஏற்று தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரவில்லை. கொரோனா பயம் காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் காலியாகவே கிடந்தன. இதைத்தொடர்ந்து, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

Next Story