புகழ்பெற்ற முன்னாள் இந்திய ஆக்கி வீரர் தயான் சந்த் காலத்தை இந்திய ஆக்கி அணியின் பொற்காலம் என்கின்றனர்.
1925 முதல் 1949 வரை 1,500 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைக்க காரணமாகவும் இருந்துள்ளார். 1936-ல் நடந்த பெர்லின் ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிராக நடந்த இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியை ஹிட்லர் நேரில் பார்த்து தயான் சந்தை பாராட்டினார். பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1979-ல் மறைந்தார். தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் தயான் சந்த் வாழ்க்கை வரலாறு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அபிஷேக் சவ்பே இயக்குகிறார். அவர் கூறும்போது, “மிக சிறந்த ஆக்கி வீரர்களில் ஒருவரான தயான் சந்த் வாழ்க்கையை படமாக்குவதில் பெருமைப்படுகிறேன். பல்வேறு ஆய்வுகள் நடத்தி இந்த படத்தை எடுக்கிறோம்” என்றார். தயான் சந்த் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் தேர்வு நடக்கிறது.