சினிமா செய்திகள்

‘சூரரைப் போற்று’ கதாநாயகியின் தித்திக்கும் நினைவுகள் + "||" + Praise the Lord Stunning memories of the heroine

‘சூரரைப் போற்று’ கதாநாயகியின் தித்திக்கும் நினைவுகள்

‘சூரரைப் போற்று’ கதாநாயகியின் தித்திக்கும் நினைவுகள்
வீட்டின் மாடியில் நின்றுகொண்டு நானும், சூர்யாவும் வாக்குவாதம் செய்து சண்டைபோடும் காட்சி எனக்கு ரொம்ப பிடித்தது.
“சூரரைப் போற்று சினிமாவில் மதுரை வட்டார மொழியை பேசுவதற்காக, மதுரையில் பல தெருக்களை சுற்றி நடந்தேன். அங்கு பெண்களோடு பெண்களாக கலந்து, அவர்கள் பேச்சையும் உடல்மொழியையும் உற்றுக்கவனித்து தெரிந்துகொண்டேன். அவை அனைத்தையும் நடிப்பில் கொண்டு வந்து பொம்மியாக ஜொலித்தேன்” என்கிறார், அபர்ணா பாலமுரளி. அவரது பேட்டி:

சூரரைப் போற்று வெற்றிக்கு பின்பு யாருடைய பாராட்டு உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது?

கேப்டன் கோபிநாத்தின் டுவிட்டர் செய்திதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது. அவரது வாழ்க்கை வரலாறான ‘சிம்பிளி பிளை’ புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டுதான் சூரரைப் போற்று உருவானது. அவரது டுவிட்டில், “எனது மனைவி கதாபாத்திரமான பொம்மியாக தோன்றிய அபர்ணா என் மனதில் பதிந்துவிட்டார். தைரியம் அதே நேரத்தில் மென்மை, கருணை, உற்சாகம் போன்று ஆணுக்கு நிகராக நிற்கிற அந்த கதாபாத்திரம் கிராமத்து பெண்களின் தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

சுதா கொங்கரா என்ற டைரக்டரும், சூர்யாவும் ஒன்றிணையும் சினிமா என்பதால் எனக்கு உற்சாகம் பொங்கியது. இறுதிச்சுற்று சினிமாவை பார்த்ததில் இருந்து நான் சுதாவின் ரசிகையாகிவிட்டேன். சூர்யாவையும் ரொம்ப பிடிக்கும். அவர்களோடு இணைந்து பணிபுரிவது எவ்வளவு உற்சாகம் தரும் செய்தி. டப்பிங் செய்யும் நேரம் வரை எனக்கு டென்ஷன்தான். என்னால் சரியாக மதுரை வட்டார மொழியை உச்சரிக்க முடியுமா என்பதுதான் அந்த டென்ஷனுக்கு காரணம். ஆனால் திரையில் பார்த்ததும் பொம்மி நன்றாக செயல்பட்டிருக்கிறாள் என்று சந்தோஷம் கொண்டேன். சூர்யாவுடன் திரையில் என் முகத்தை பார்த்ததும் அதிக மகிழ்ச்சியை தந்தது.

சூர்யாவுடன் இணைந்து நடித்த காட்சிகளில் உங்களை அதிகம் கவர்ந்தது எது?

வீட்டின் மாடியில் நின்றுகொண்டு நானும், சூர்யாவும் வாக்குவாதம் செய்து சண்டைபோடும் காட்சி எனக்கு ரொம்ப பிடித்தது. முதன்முதலில் பெண் பார்க்கும் காட்சி, பொம்மி திரும்பிப் பார்த்து நடப்பது, கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது போன்ற காட்சிகளும், முதல் பாட்டும் எனக்கு ரொம்ப பிடித்தமானதுதான்.

பொம்மி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதற்காக நீங்கள் செய்த கடினமான முயற்சி எது?

மதுரையின் வட்டார மொழியை கையாள்வதற்கும், பொம்மியின் இயல்பான குணாதிசயத்தை வெளிப்படுத்தவும் அதிக சிரமப்பட்டேன். பொம்மி, இதுவரை நான் அறிந்திராத கதாபாத்திரம். பொம்மியின் தோற்றத்திற்காகவும் புதிய பரிசோதனை முயற்சிகளை செய்தார்கள். எல்லாம் எனக்கு புதுமையான அனுபவம். என்னை தேர்வு செய்யும்போதே மதுரை வட்டார மொழி பயிற்சிகளை தந்தார்கள். அது சிரமமானதாகத்தான் இருந்தது. ஏன்என்றால் அந்த மாதிரியான வார்த்தைகளை நான் அதுவரை கேள்விப்பட்டிருக்கவே இல்லை. அதனால் மீண்டும் ஒருமுறை ஸ்கிரிப்ட்டை அனுப்பித்தந்து, வீடியோ எடுத்து அனுப்பும் வாய்ப்பை டைரக்டர் எனக்கு தந்தார்.

சூர்யாவின் நடிப்பை பார்த்து வியந்த அனுபவம் ஏதேனும் உண்டா?

படப்பிடிப்பின் முழுநேரமும் அவர் நெடுமாறன் என்ற கதாபாத்திரமாகவே இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு காட்சியின் உணர்ச்சியையும், வலியையும் அவர் உள்வாங்கிக்கொண்டு நடிப்பார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது. சூர்யாவின் 19 வயது பருவ காட்சியும் அதில் உண்டு. அவர் அந்த தோற்றத்திற்காக தன்னை வெகுவாக சிரமப்படுத்திக்கொண்டார். நான் கொஞ்சம் சோம்பல். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை எனக்கு குறைவு. விரும்பிய உணவுகளை சாப்பிடுவேன். முன்பு ஜிம்முக்கு சென்று கிக்பாக்சிங் கற்றேன். இப்போது தினமும் யோகா செய்கிறேன்.

சூரரைப் போற்று படப்பிடிப்பு 60 நாட்களுக்கு மேல் நடந்தது. எல்லோரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் மதுரை பெண்ணாக தோன்றினேன். மதுரை பெண்கள் சக்திமிக்கவர்கள். எனக்கு டப்பிங்கில் உதவி செய்த சத்யா அக்கா அதற்கு நல்ல உதாரணம். அவருக்கு சினிமாவோடு எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் மிகுந்த தன்னம்பிக்கையோடு அவர் தனது பணியை செய்தார்.

உங்களை பற்றி கூறுங்கள்?

நான் எல்லோரிடமும் நட்பாக பழகுவேன். பள்ளி, கல்லூரி நண்பர்கள் இப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள். நான் ஆர்க்கிடெக்சர் கல்வியில் பட்டம் பெற்றிருக்கிறேன். பாட்டு, நடனம், நடிப்பு போன்றவை எனக்கு பிடித்தமானவை. சினிமாவுக்கு நடுவில் இடைவேளை எடுத்துக்கொண்டு ஆர்க்கிடெக்சர் படித்தேன். அந்த அளவுக்கு அந்த கோர்ஸ் எனக்கு பிடித்திருந்தது. நான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், செல்லமாக வளர்ந்தேன். பெற்றோர் மிகுந்த ஒத்துழைப்புகொடுத்து எனக்கு வழிகாட்டுகிறார்கள்.

எனது பெற்றோர் இசைத்துறையை சேர்ந்தவர்கள். எனது இசைத்திறனை மேம்படுத்தவேண்டும் என்று அப்பா விரும்புகிறார். நாங்கள் கத்தாரில் வசித்தோம். நான்காம் வகுப்பு படிக்கும்போது சொந்த ஊரான திருச்சூருக்கு வந்தோம். சிறுவயதில் இருந்தே நடனம் கற்றேன். நிறைய மேடை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். முதலில் குறும்படம் ஒன்றில் நடித்தேன். “மகேஷின்ற பிரதிகாரம்” என்ற மலையாள சினிமா என்னை பிரபலமாக்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘சூரரைப் போற்று’ நிஜ நாயகனின் வெற்றிக் கதை
ஏழைகளாலும் விமானத்தில் செல்ல முடியும் என்ற கதைப் பின்னணியைக்கொண்டது, சூரரைப் போற்று சினிமா. சூர்யா அதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.