திருநங்கைகளின் கதை ‘பில்டர் கோல்டு’ படத்தில் 70 இடங்களில் வெட்டு - தணிக்கையில் நீக்கப்பட்டது


திருநங்கைகளின் கதை ‘பில்டர் கோல்டு’ படத்தில் 70 இடங்களில் வெட்டு - தணிக்கையில் நீக்கப்பட்டது
x
தினத்தந்தி 26 Dec 2020 7:10 PM GMT (Updated: 26 Dec 2020 7:10 PM GMT)

திருநங்கைகளின் அத்தனை உணர்ச்சிகளையும் சித்தரிக்கும் வகையில் உருவான ‘பில்டர் கோல்டு’ படத்தை தணிக்கை குழுவினர், 70 இடங்களில் ‘கட்’ கொடுத்து இருக்கிறார்கள்.

திருநங்கைகளின் காதல், சோகம், வலி, வேதனை, கோபம், பழிவாங்குதல் ஆகிய அத்தனை உணர்ச்சிகளையும் சித்தரிக்கும் வகையில், ‘பில்டர் கோல்டு’ படம் தயாராகி இருக்கிறது. முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கியிருக்கும் விஜயபாஸ்கர், படத்தை பற்றி கூறுகிறார்:-

பில்டர் கோல்டு என்றால் சொக்க தங்கம் என்று பொருள். இது, இந்த கதையின் நாயகியை குறிக்கும். இதுவரை வந்த திருநங்கைகளை பற்றிய கதையில் இருந்து மாறுபட்ட கதை, இது. 3 திருநங்கைகளை சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது. தளபதி, நாயகன் ஆகிய படங்களின் கதைகளைப்போல் அதிரடி காட்சிகளுடன் கதை நகரும்.

800 திருநங்கைகளை வைத்து ஒரு பாடல் காட்சியையும், 400 பேர்களை வைத்து இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கி இருக்கிறோம். படத்தில் வில்லன் இருக்கிறார். அவர் யார்? என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறோம்.

படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், 70 இடங்களில் ‘கட்’ கொடுத்து, அந்த 70 இடங்களையும் நீக்கியபின், ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், ஜனவரியில் திரைக்கு வரும்.

Next Story