மாறுபட்ட கதையம்சங்களுடன் 5 புதிய படங்கள்


மாறுபட்ட கதையம்சங்களுடன் 5 புதிய படங்கள்
x
தினத்தந்தி 31 Dec 2020 10:41 PM GMT (Updated: 31 Dec 2020 10:41 PM GMT)

தமிழ் பட உலகின் பைனான்சியரும், வேதாளம், பாகுபலி, அரண்மனை, மாயா ஆகிய படங் களின் வினியோகஸ்தரும், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின்

தயாரிப்பாளருமான ரமேஷ் பி.பிள்ளை, அடுத்து மாறுபட்ட கதையம்சங் களுடன் 5 புதிய படங்களை வழங்குகிறார். 5 படங்களையும் ஆர்.அபிஷேக், ஆர்.ஆதித்யா, ஆர்.சித்தார்த் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்.

அதில் ஒரு படம், ‘பிளாஷ்பேக்’. இது ஒரு காதல் கதை. ரெஜினா கசன்ட்ரா, இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். டான்சேண்டி கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். காரைக்குடி செட்டிநாடு மாளிகையிலும், சென்னை அரசு கலைக்கல்லூரியிலும் சில காட்சிகள் படமானது.

இன்னொரு படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். குழந்தைகள் கொண்டாடும் ஒரு அற்புதமான வேடத்தில், பிரபுதேவா வருகிறார். ‘மஞ்சள் பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய ராகவன் டைரக்டு செய்கிறார்.

மற்றொரு புதிய படம், ‘ரவுடி பேபி’. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜா சரவணன் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். சுவாரஸ்யமான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதையம்சம் கொண்ட படம், இது.

ரமேஷ் பி.பிள்ளையின் 4-வது படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். படத்தின் பெயர், ‘பிளாக் மேஜிக்’. இதில், ஸ்ரீராம் ராமசாமி டைரக்டராக அறிமுகம் ஆகிறார். இது, மேஜிக் கலை பற்றிய திகில் படம்.

5-வது படம், ‘கோஸ்ட்’. இந்தப் படத்தை இயக்குபவர், தமிழரசன். குறும் படம் உள்பட பல போட்டிகளில் பரிசை வென்றவர். சகோதரியின் மரணத்தில் சந்தேகம் கொண்ட கதையின் நாயகி உண்மையை கண்டறிய பயணமாவது போன்ற திகில் படம்.

Next Story