'என் உயிர்த் தோழன்' பட கதாநாயகனின் உடல் நிலை பார்த்து கண்ணீர் சிந்திய பாரதிராஜா


என் உயிர்த் தோழன் பட கதாநாயகனின் உடல் நிலை பார்த்து கண்ணீர் சிந்திய பாரதிராஜா
x
தினத்தந்தி 10 Jan 2021 11:10 AM GMT (Updated: 10 Jan 2021 11:10 AM GMT)

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலம் சரியிலாமல் இருக்கும் தனது அறிமுக நாயகனை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் சிந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

சென்னை,

1990-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர்த் தோழன்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பாபு. அவர் தான் அந்தப் படத்துக்கு வசனமும் எழுதியிருந்தார். அந்தப் படத்தினைத் தொடர்ந்து 'என் உயிர்த் தோழன்' பாபு என்றே சினிமா வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் 'பெரும்புள்ளி', கோபி பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'தாயம்மா' படங்களில் அவர் நாயகனாக நடித்தார்.

அதையடுத்து 'மனசார வாழ்த்துங்களேன்' என்ற படத்தின் சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்ததால் விபத்தில் சிக்கி பாபுவின் முதுகுத்தண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நடமாட முடியாமல் படுத்த படுக்கையானார். இடையே கொஞ்சம் தேறி வந்தாலும் மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கான செலவு அதிகமானது. இதனைத் தொடர்ந்து தனது மருத்துவ சிகிச்சைக்காக திரையுலக நண்பர்களிடம் பாபு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, பாபுவை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது பாரதிராஜாவிடம் பாபு நெகிழ்ச்சியுடன் பேசுவதும், அதனைத் தொடர்ந்து பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.

Next Story