கங்கனா ரணாவத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு


கங்கனா ரணாவத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2021 4:21 PM GMT (Updated: 11 Jan 2021 4:21 PM GMT)

தேசத் துரோக குற்றச்சாட்டு வழக்கில் கங்கனா ரணாவத்தைகைது செய்ய விதிக்கப்பட்ட தடை 25ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் சமூக வலைதளங்களில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதை விசாரித்த கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மேலும் அவரை ஜனவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட மும்பை ஐகோர்ட், அதுவரை அவரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில்  இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, மும்பை  ஐகோர்ட்டில் 2 பேரும் தாக்கல் செய்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது மனு மீதான விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்த  ஐகோர்ட், புதிதாக 2 பேருக்கும் சம்மன் அனுப்பக் கூடாதென காவல்துறைக்கு உத்தரவிட்டது.

தேசத் துரோக குற்றச்சாட்டின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கைது நடவடிக்கையிலிருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பை 25ம் தேதி வரை மும்பை  ஐகோர்ட் நீட்டித்துள்ளது.

Next Story