மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார் நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர் நோட்டீஸ்


மாஸ்டர் பட காட்சிகள் கசிந்த விவகாரம்: தனியார்  நிறுவனத்திடம் ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பட தயாரிப்பாளர்  நோட்டீஸ்
x
தினத்தந்தி 20 Jan 2021 10:24 AM GMT (Updated: 20 Jan 2021 10:24 AM GMT)

நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சென்னை

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக கடந்த 13-ந்தேதி திரைக்கு வந்தது. அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து உள்ளார்.

 விஜய் படங்களின் முந்தைய வசூல் சாதனையை ‘மாஸ்டர்’ முறியடித்து இருக்கிறது. 'மாஸ்டர்' பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வசூலை பெற்று உள்ளது. கடந்த 6 நாட்களில் இந்தப்படம்  உலகளவில் ரூ .150 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.    இத்தனைக்கும் அரசு விதித்த நிபந்தனைக்கு கட்டுப்பட்டு எல்லா தியேட்டர்களிலும் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

எல்லா விஜய் படங்களையும் போல் இந்த படமும் பல பிரச்சினைகளை சந்தித்த பின்னரே திரைக்கு வந்தது. முதலில் படத்தை தியேட்டரில் ‘ரிலீஸ்’ செய்வதா? அல்லது ‘ஓ.டி.டி.’யில் ‘ரிலீஸ்’ செய்வதா? என்ற பிரச்சினை வந்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

ஆனால்  படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னால் இந்த படத்தின் சில  காட்சிகள்  இணையதளங்களில் வெளியானது. இதற்கு  ஒரு தனியார் டிஜிட்டல் நிறுவனம் காரணம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் 'மாஸ்டர்' தயாரிப்பாளர் சட்டவிரோதமாக கசிந்த காட்சிகளுக்கு இழப்பீடு கோர முடிவு செய்துள்ளார்.

'மாஸ்டர்'  படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் இணை தயாரிப்பாளர் லலித் குமார்  கசிந்த காட்சிகளுக்கு ரூ .25  கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story