சினிமா செய்திகள்

35 ஆண்டுகள் இசையமைத்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியது வருத்தமா? இளையராஜா பேட்டி + "||" + From Prasad Studio Regret expelled Interview with Ilayaraja

35 ஆண்டுகள் இசையமைத்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியது வருத்தமா? இளையராஜா பேட்டி

35 ஆண்டுகள் இசையமைத்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியது வருத்தமா? இளையராஜா பேட்டி
பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்த இளையராஜா சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது சென்னை தியாகராயநகர் எம்.எம்.பிரிவியூ தியேட்டரில் புதிய ரிக்கார்டிங் ஸ்டூடியோ தொடங்கி உள்ளார். அங்கு நேற்று பாடல் பதிவை தொடங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழி படங்கள் தயாராகி வெளியே போனது. அவ்வப்போது இந்தி படங்களும் தயாரானது. இங்கு இருக்கும் ஸ்டூடியோக்கள் வேறு எங்கும் இல்லாமல் இருந்ததே அதற்கு காரணம். விஜயாவாகினி ஆசிய கண்டத்திலேயே பெரிய ஸ்டூடியோ. அந்த ஸ்டூடியோவை இன்று காணோம். ஜெமினி ஸ்டூடியோ, நெப்டியூன் ஸ்டூடியோ, சாரதா ஸ்டூடியோ, ஏ.வி.எம் ஸ்டூடியோ, விஜயா கார்டன் போன்ற ஸ்டூடியோக்கள் காணாமல் போய் விட்டன. இப்படி காணாமல் போன ஸ்டூடியோக்களில் பிரசாத் ஸ்டூடியோவும் சேரணும் என்று நான் வெளியே வந்து விட்டேன்.

எனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோவை ஆரம்பித்து இருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கும் திரையுலகத்தில் மாறாத இடத்தை பிடித்த எனது இசை தலைமுறை தலைமுறைக்கும் தொடர்வதற்காக இந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோ அமைத்துள்ளேன். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியே வந்ததை நினைத்து வருத்தப்பட்டு பயன் இல்லை. எல்லாம் சவால்கள்தான்.

முன்னேறுபவனை தடுக்க நிறைய இடையூறுகள் வெளியே உள்ளது. நமது வேலையை முயற்சியோடு செய்தால் அடையும் இடம் வேறாக இருக்கும். இப்போது வரும் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறார்கள். காரணம் பாடல் அப்படி இருக்கிறது. பாடல்தான் முக்கியத்துவத்தை எடுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. எனக்கு வாழ்க்கையில் எல்லா நாட்களும் ஒரே நாள்தான். மாற்றம் எதுவும் இல்லை. இசை மழையை போன்றது. எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நாங்கள் போடும் பாடலைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து மாற்ற முடியாது. இவ்வாறு இளையராஜா கூறினார்.