நதியாவின் `பூவே பூச்சூடவா' டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள்


நதியாவின் `பூவே பூச்சூடவா டைரக்டர் பாசில் மலரும் நினைவுகள்
x

`பூவே பூச்சூடவா' என்ற பெயரில் தமிழில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அதையும் பாசில்தான் இயக்கினார்.

நடிகை நதியா `நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு' என்ற மலையாள சினிமாவில் அறிமுகமானார். அவரை டைரக்டர் பாசில் அறிமுகம் செய்தார். அந்த படம் `பூவே பூச்சூடவா' என்ற பெயரில் தமிழில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அதையும் பாசில்தான் இயக்கினார். 1985-ம் ஆண்டு வெளியான அந்த படம் 35 வருடங்களை கடந்த பின்பும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. நீண்ட காலங்கள் ஆனபின்பும் அதே இளமைத் துள்ளலோடு இப்போதும் நதியா நடித்துக்கொண்டிருக்கிறார். பூவே பூச்சூடவா படத்தில் நதியா உடனான தனது மலரும் நினைவுகளை பாசில் பகிர்ந்துகொள்கிறார்!

"நான் அப்போது நிறைய சினிமாக்கள் பார்ப்பேன். அதில் ஒரு டெலிபிலிமில் அம்மா- மகள் உறவு மிக ஆழமாக விளக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து வித்தியாசமாக பாட்டி- பேத்தி உறவை மையப்படுத்தி கதையை உருவாக்க முடிவுசெய்தேன். உருவாக்கி, அதற்கு `நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு' என்று பெயர் சூட்டினேன்.

துள்ளல் நிறைந்த அந்த பேத்தி கதாபாத்திரத்தை பற்றி சிந்தித்தபோது, ரொம்ப சுறுசுறுப்பான நடிகை அதற்கு தேவை என்று தீர்மானித்தேன். அது புதுமுகமாக இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நடிகை என்றால் கதாபாத்திரத்தின் ஈர்ப்பு குறைந்துபோய்விடும். அதோடு அவள் ஒரு சோகத்தை மனதில் மறைத்துக்கொண்டு சந்தோஷ முகமூடி அணிந்து செயல்படவேண்டும். அதை எல்லாம் கவனத்தில்கொண்டு அதற்கேற்ற நடிகையை தேடினேன். அது ஒரு கடினமான அனுபவமாக இருந்தது.

எனது சகோதரர்கள் இரண்டு பேர் தோகாவில் வசித்தார்கள். அவர்களது நண்பரான மொய்து மும்பையில் வசித்தார். அவர்களது மகள் செரீனா கல்யாண விருந்து ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று எனக்கு கிடைத்தது. அதை கண்டதும் அந்த பெண்ணை நேரில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் மும்பைக்கு சென்றேன். மொய்துதான் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அப்போது செரீனா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.

நான் வெகுநேரம் காத்திருந்த பின்பு அவர் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். என் மனதில் ஓடிக்கொண்டிருந்த கதாபாத்திரம் போலவே அவரது நடை, உடை, பாவனை இருந்ததும் உற்சாகம் கொண்டேன். அவர்தான் கதாநாயகி என்று அப்போதே முடிவுசெய்துவிட்டேன். அவரது கண்களும், முகமும் கவர்ந்தது. என் கையில் இருந்த சிறிய கேமராவால் அவரது பல்வேறு முகபாவங்களை படமாக்கினேன். நான் கதையை சொன்னேன். ஆர்வத்தோடு செரீனா கேட்டார்.

நான் திரும்பி கொச்சி வந்து விமான நிலையத்தில் இறங்கியபோது எம்.டி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு செல்ல அங்கே காத்திருந்தார். நான் அவரிடம் பல விஷயங்களை பேசிவிட்டு செரீனாவின் போட்டோவையும் காட்டினேன். அவர் `வெரி எக்ஸ்பிரசிவ் ஐஸ்' என்று கண்களை வர்ணித்தார். அந்த கதாபாத்திரத்திற்காக நான் சந்தித்த ஒரே பெண் அவர் மட்டுமே.." என்று கூறும் பாசில், படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்களையும் விவரிக்கிறார். செரீனா, நதியாவாக பெயர் மாறிய ருசிகரத்தையும் விவரிக்கிறார்.

"ஷூட்டிங்குக்காக அவர், அம்மாவுடன் வந்திறங்கியபோது அழைத்து வர நானும் விமான நிலையம் சென்றிருந்தேன். அப்போது அவர் ஒரு கறுப்பு நிற கண்ணாடி அணிந்து வந்தார். அப்படி கண்ணாடி அணிந்த ஒரு காட்சியையும் ஏற்கனவே நான் சேர்த்து வைத்திருந்ததால், நான் எதிர்பார்த்ததுபோல் எல்லாம் நடந்துகொண்டிருந்தது. ஷூட்டிங்கில் நான் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. நடிப்பும், இயல்பும் ஒரே மாதிரிதான் இருந்தது. திரையில் பார்த்தபோது, எதிர்பார்த் ததைவிட காட்சிகள் சிறப்பாய் அமைந் திருந்தது.

அந்த காலகட்டத்தில், ருமேனியாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நதியா கொமேனச்சி உலக அளவில் பிரசித்தி பெற்றவராக இருந்தார். பத்திரிகைகளில் அடிக்கடி அவரது படங்களும், செய்திகளும் வந்துகொண்டிருந்தன. அதை பார்த்த எனது சகோதரன் `இந்த செரீனாவுக்கு பதிலாக அந்த நதியாவை எடுத்து சேர்த்துவிட்டால் நன்றாக இருக்குமே!' என்றார். எனக்கும் அது சரியாக தோன்றியதால் `செரீனா மொய்து', `நதியா மொய்து' ஆனார். அதுவே மக்கள் மனதில் நிலைக்கும் பெயராகிவிட்டது. முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரமும் சிறப்பாக அமைந்து, காலங்கடந்து இன்றும் அது மக்கள் மனதில் நின்றுகொண்டிருக்கிறது. அந்த படம் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

1985-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் `நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு' ரிலீஸ் ஆனது. ரிலீஸ்க்கு முன்பு படத்தின் கிளைமேக்ஸ் என்னை கவலைக்குள்ளாக்கியது. வினியோகஸ்தர்கள் உள்பட பலரும் என்னிடம் `ஆபரேஷன் சக்ஸஸ்' என்ற ஒரு வார்த்தையையாவது இறுதிக்காட்சியில் சேருங்கள் என்றார்கள். ஆனால் நானோ அதனை ஒரு கவிதை போன்று நிறைவு செய்திருந்தேன். அவர் களது விருப்பத்திற்கிணங்க `அவர்கள் காத்திருக்கிறார்கள்.. அவள் என்றாவது வருவாள் என்று..' என எழுதி சேர்த்து நிறைவு செய்தேன். இன்று சிந்தி்த்தாலும் அதுவே அழகான முடிவாக தெரிகிறது. மாறாக, இறுதிக் காட்சியில் ஆபரேஷன் தியேட்டரை எல்லாம் காட்டியிருந்தால் படத்தின் அழகு போயிருக்கும். தமிழிலும் பூவே பூச்சூடவா என்ற பெயரில் சக்கைப்போடு போட்டது.

அதன் இரண்டாவது பாகத்தை டைரக்டு செய்யலாமா என்று சிறிது காலம் யோசித்தேன். பின்பு அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். ஒரு படம் அதன் முழுமையை அடைந்துவிட்ட பின்பு அதில் இரண்டாவது பாகம் உருவாகுவது ரொம்ப சிரமம். நோக்காத்த தூரத்து கண்ணும் நட்டு, மணிச்சித்ர தாழ் போன்ற சினிமாக்கள் அதன் முழுமையை அடைந்துவிட்டன. அவைகளில் இரண்டாம் பாகம் தயார் செய்தால், அந்த படங்களுக்கு இருக்கிற நல்ல பெயர் போய்விடக்கூடும்"- என் கிறார், பாசில்.

Next Story