விலங்குகளை பார்த்து பயம் இல்லை; ‘‘மனிதர்களை பார்த்துதான் பயம்’’; நடிகர் விஷ்ணு விஷால் சொல்கிறார்


விலங்குகளை பார்த்து பயம் இல்லை; ‘‘மனிதர்களை பார்த்துதான் பயம்’’;  நடிகர் விஷ்ணு விஷால் சொல்கிறார்
x
தினத்தந்தி 7 March 2021 3:05 AM GMT (Updated: 7 March 2021 3:05 AM GMT)

பிரபு சாலமன் இயக்கத்தில், ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதில் ராணா மலைவாசியாகவும், விஷ்ணு விஷால் யானைப்பாகனாகவும் நடித்துள்ளனர்.

‘காடன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி விஷ்ணு விஷால் சொல்கிறார்:

‘‘சின்ன வயதில் நான் யானைகளை பார்த்து ரொம்ப பயப்படுவேன். படத்தில் நடித்துள்ள யானையை முதல் முறையாக பார்க்கும்போது பயமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக என் வாழ்க்கையில் நடந்தவைகளை பார்க்கும்போது, மனிதர்களை விட விலங்குகள் மேல் என்று புரிந்து கொண்டேன்.மனிதர்களை பார்த்துதான் பயப்பட வேண்டும் என்று புரிந்தது. யானைகள் கூட பாசமாக இருக்கின்றன. மனிதர்கள் அப்படி இல்லை. என்னுடைய அனுபவத்தில் இதை சொல்கிறேன்.

யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். யானையுடன் நடித்து 3 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு நான் போய் அதன் பக்கத்தில் நின்றாலும், என்னை அடையாளம் தெரிந்து கொள்ளும். யானை, வெல்லத்தை விரும்பி சாப்பிடும். அதனுடன் நடித்த நாட்களில் எல்லாம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், யானைக்கு வெல்லம் கொடுத்து விடுவேன். அந்த நன்றியை யானை பாசமாக 
வெளிப்படுத்தும். எனவே விலங்குகளை பார்த்து எனக்கு பயம் இல்லை.’’

இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.

விஷ்ணு விஷால், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன். நடிகர் கே.நட்ராஜின் மகளை காதல் மணம் புரிந்து, பின்னர் விவாகரத்து செய்தவர்.

Next Story