சினிமா செய்திகள்

எத்தனை கோடி கொடுத்தாலும் பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன் ராமராஜன் உறுதி + "||" + Against women I will not take the picture Ramarajan confirmed

எத்தனை கோடி கொடுத்தாலும் பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன் ராமராஜன் உறுதி

எத்தனை கோடி கொடுத்தாலும் பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன்  ராமராஜன் உறுதி
‘மார்க்கெட்’டின் உச்சத்தில் இருந்தவர், ராமராஜன். பூஜை போட்ட அன்றே அவருடைய படங்கள் வியாபாரம் ஆனது.
தமிழ் சினிமாவில், ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரை அடுத்து, ‘மார்க்கெட்’டின் உச்சத்தில் இருந்தவர், ராமராஜன். பூஜை போட்ட அன்றே அவருடைய படங்கள் வியாபாரம் ஆனது. அனைத்து ‘ஏரியா’க்களின் வினியோக உரிமையும் ஒரேநாளில் விற்று தீர்ந்தன. பல தியேட்டர்களில் 100 நாட்களும், சில தியேட்டர்களில் வெள்ளி விழாவும் கண்ட ‘கரகாட்டக்காரன்’ படம், ராமராஜனை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவின. அவருடைய திருமண வாழ்க்கையும் முறிந்து போனது. ஒரு விபத்து அவருடைய கால்களை முறித்து மிகப்பெரிய சோதனையை கொடுத்தது.

அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் கூட்டங்களில் மட்டும் பேசினார். சமீபத்தில் அவரை கொரோனா தாக்கியது. அதன் கொடூர பிடியில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக தப்பி வந்து விட்டார். இப்போது அவர் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக திரைக்கதை எழுதும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘‘நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை டைரக்டு செய்து இருக்கிறேன். 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன. நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும்.

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். அதுபோல் நான் கடைசி வரை ‘அம்மா’வின் (ஜெயலலிதா) தொண்டனாகவே இருப்பேன். தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன.

என் மகன் அருண் இப்போது லண்டனில் வேலை செய்கிறான். அவனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். மகள் அருணாவுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. மகனும், மகளும் என்னுடன் அடிக்கடி போனில் பேசுகிறார்கள். நேரில் வந்தும் பார்க்கிறார்கள்.’’ இவ்வாறு ராமராஜன் கூறினார்.