தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் - நடிகர் சூர்யா இரங்கல்


தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் - நடிகர் சூர்யா இரங்கல்
x
தினத்தந்தி 17 April 2021 7:36 AM GMT (Updated: 17 April 2021 7:36 AM GMT)

மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் என்று நடிகர் சூர்யா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவர் மறைவுக்கு திரைதுறைப் பிரபலங்கள், பலர் தங்களின் டுவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார் என்று நடிகர் சூர்யா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்... மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்...” என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா, தம்பி கார்த்தி ஆகியோர் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 




இதனிடையே நடிகர் விவேக் மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில், “நடிகர் விவேக்கின் இறப்பு நம்பமுடியாத ஒன்று, அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும், திரைத்துறையில் பல ஆண்டுகள் மக்களை மகிழ்வித்து வந்த நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவுகளில் நிறைந்து இருப்பீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

நடிகை ராதிகா தனது டுவிட்டரில், “நண்பர் நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவருடன் பல சிறந்த நினைவுகள் என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

திரைப்பட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில், “நடிகர் விவேக்கின் மரணச் செய்தி அறிந்து மனமுடைந்து விட்டேன், அவர் விட்ட சென்ற நற்பணிகளை தொடர்ந்து செய்ய நான் முயற்சிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா தனது டுவிட்டரில், “திரை வாழ்க்கையில் மூட நம்பிக்கைக்கு எதிராகவும், சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை, தான் ஏற்றுள்ள கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களை மகிழ்வித்து, நிஜ வாழ்க்கையில் தான் கொண்ட கொள்கையில் நேர்மையுடனும் என்மீது பேரன்பு கொண்ட சின்னக்கலைவாணர் விவேக்கின் மறைவு அதிர்ச்சளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். 

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது டுவிட்டரில், “மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு நான் தீவிர ரசிகன். தனது நகைச்சுவையில், சமூக கருத்துகளை மக்களிடம் சேர்த்தவர். அவர் எப்போதும் நம் இயதங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்” என்று பதிவிட்டுள்ளார். 

நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில், “நடிகர் விவேக் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவர் திரைத்துறையிலும் சமூக சேவையிலும் அவர் ஆற்றிய பணி என்றென்றும் நமது மனதில் நீடித்து இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கூறியதாவது, "தமிழ் திரையுலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டது. அவருடைய குடும்பம், நண்பர்கள், திரைத்துறை அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் ஆறுதல்தர வேண்டுகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story