திருமணம் குறித்து நடிகை ரம்யா வெளியிட்ட ருசிகர தகவல்


திருமணம் குறித்து நடிகை ரம்யா வெளியிட்ட ருசிகர தகவல்
x
தினத்தந்தி 25 April 2021 9:52 PM GMT (Updated: 2021-04-26T03:22:16+05:30)

நடிகை ரம்யா இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் தனது திருமணம் குறித்து ருசிகர தகவலை வெளியிட்டார். அந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

நடிகை ரம்யா
கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரம்யா. இவர் கன்னட ரசிகர்களால் ‘சான்டல்வுட் குயின்’ என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மண்டியா தொகுதி எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அவர் திடீரென கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கினார். பொது இடங்களில் அவர் முன்புபோல் தலைகாட்டுவது இல்லை. மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் திடீரென கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

திரை உலகில் 18 வருடங்கள்
மேலும் அவர் திரை உலகிற்கு வந்து 18 வருடங்கள் நிறைவடைந்து உள்ளதை நினைவுகூர்ந்தார். அதாவது கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதிதான் நடிகை ரம்யா, நடிகர் புனித்ராஜ்குமாருடன் ஜோடியாக நடித்த ‘அபி’ படம் திரைக்கு வந்திருந்தது. அந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 18 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அதை நினைவுகூர்ந்து நடிகை ரம்யா ரசிகர்களுடன் பேசினார். அப்போது அவர், ‘‘உண்மையிலேயே இது எனக்கு பெருமை அளிக்கிறது. திரைத்துறைக்கு வந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்கள் என்னை மிகவும் உறுதிப்படுத்தி உள்ளது. ரசிகர்கள்தான் என்னுடைய மகான்கள். அரசியலில் எனது காலம் முடிந்துவிட்டது. மனிதநேயம், தானம் போன்ற வழிகளில் நான் என்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறேன்’’ என்று தெரிவித்தார்.

திருமணம் எப்போது...
அப்போது ஒரு ரசிகர், ‘‘நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள். நீங்கள் பிரபல கன்னட நடிகர் ரக்‌ஷித் செட்டியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’’ என்று கூறி ஒரு கேள்வியை எழுப்பினார்.அதற்கு நடிகை ரம்யா, ‘‘எனக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும். ஆனால் அது அவருடன் அல்ல. திருமணம் என்பது வேலை அல்ல. அது இருவரும் சேர்ந்து அன்யோன்யமாக வாழ்வது. 

திருமணம் செய்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. திருமணம் எப்போது என்பது வேடிக்கையான கேள்வி. நான் திருமணம் செய்து கொள்ள இரக்கம், கருணை மற்றும் உண்மையான திறந்த மனம் கொண்ட நபர் தான் வேண்டும்’’ என்று ரம்யா வேடிக்கையாக பதில் அளித்தார்.

இந்த உரையாடல் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Next Story