ஓ.டி.டி.க்கு வரும் பெரிய கதாநாயகர்களின் படங்கள்


ஓ.டி.டி.க்கு வரும் பெரிய கதாநாயகர்களின் படங்கள்
x
தினத்தந்தி 2 May 2021 2:10 PM GMT (Updated: 2021-05-02T19:40:03+05:30)

பெரிய கதாநாயகர்களின் படங்கள் ஓ.டி.டி.யில் வெளிவர தயார் நிலையில் உள்ளன.

தமிழ் சினிமா ஏறக்குறைய கொரோனா நோயாளிகளைப்போல் சுவாசிக்க முடியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு டி.வி. தொடர்கள், திருட்டு வி.சி.டி., இணையதளத்தில் புது படங்கள் என்று சில பிரச்சினைகளால் சினிமா பாதிக்கப்பட்டு தன் ஜீவித நாட்களை கணிசமாக இழந்து விட்டது.

கொரோனாவின் முதல் அலையிலேயே சினிமா மூச்சுத்திணறி, அதிர்ஷ்டவசமாக ‘தம்’ பிடித்துக் கொண்டது. தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், விஜய் நடித்த ‘மாஸ்டர், ’ தனுஷ் நடித்த ‘கர்ணன்’ போன்ற படங்களின் வெற்றி, நசிந்து போன சினிமாவுக்கு வைட்டமினாக அமைந்தன. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து தியேட்டர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

இந்த சூழ்நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக மறுபடியும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பல பட அதிபர்கள் தியேட்டர்களை மறந்து, ‘ஓ.டி.டி.’யில் படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்னுதாரணமாக இருந்தவர், நடிகர் சூர்யா. அவருடைய தயாரிப்பில், மனைவி ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ‘ஓ.டி.டி.’யில் துணிச்சலாக ரிலீஸ் செய்தார். அடுத்து அவர் நடித்த ‘சூரரை போற்று’ படமும் ‘ஓ.டி.டி.’யில் வெளிவந்தது.

இதையடுத்து ‘எம்.ஜி.ஆர். மகன், ’ ‘மாநாடு, ’ ‘பார்டர்,’ ‘கோடியில் ஒருவன்,’ ‘ஜெகமே தந்திரம்,’ ‘லாபம்,’ ‘கோப்ரா,’ ‘டாக்டர்’ ஆகிய பிரபல கதாநாயகர்களின் படங்கள் வெளிவர தயார் நிலையில் உள்ளன. இதில் சில படங்களை ‘ஓ.டி.டி.’யில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.

அந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து தியேட்டர்களின் எதிர்காலம் அமையும்.

Next Story