பிரபல இந்தி (கவர்ச்சி) நடிகை மல்லிகா செராவத் 5 பாதுகாவலர்களும், மேக்கப், டச்சப், காஸ்ட்யூமர் என மொத்தம் 8 பேர் அவருடன் படப்பிடிப்புக்கு வருகிறார்கள்.
ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தை வி.சி.வடிவுடையான் டைரக்டு செய்து வருகிறார். பழனிவேல் தயாரிக்கிறார். இது ஒரு வரலாற்று படம். ‘இளவரசி நாகவல்லி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில், பிரபல இந்தி (கவர்ச்சி) நடிகை மல்லிகா செராவத் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் 50 நாட்கள் ‘கால்சீட்’ கொடுத்து இருக்கிறார். இதுவரை 40 நாட்கள் நடித்து இருக்கிறார். அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக டைரக்டர் வடிவுடையான் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:-
‘‘பொதுவாக இந்தி நடிகர்-நடிகைகள் மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்புக்கு வருவார்கள். அந்த (கெட்ட) பழக்கத்தை மல்லிகா செராவத் மாற்றி விட்டார். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால், சரியாக 7 மணிக்கு வந்து விடுகிறார். சென்னையில் அவர் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
ஆனால், நட்சத்திர ஓட்டல் சாப்பாடு கேட்பதில்லை. படப்பிடிப்பு குழுவினருக்கு என்ன சாப்பாடு கொடுக்கப்படுகிறதோ, அதையே சாப்பிடுகிறார். இதுதான் வேண்டும் என்று கேட்பதில்லை. தமிழ்நாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார். குறிப்பாக, செட்டிநாட்டு உணவை ருசித்து சாப்பிடுகிறார்’’ என்றார்.
மற்ற பிரபல இந்தி நடிகைகளைப்போல் மல்லிகா செராவத்தும் பாதுகாவலர்களுடன்தான் படப்பிடிப்புக்கு வருகிறார். தினமும் இவருடன் 5 பாதுகாவலர்களும், மேக்கப், டச்சப், காஸ்ட்யூமர் என மொத்தம் 8 பேர் அவருடன் படப்பிடிப்புக்கு வருகிறார்கள்.