தொடரும் கொரோனா உயிரிழப்புகள்: ஜி.எஸ்.டி வரி கட்ட மறுக்கும் நடிகை நிலா


தொடரும் கொரோனா உயிரிழப்புகள்: ஜி.எஸ்.டி வரி கட்ட மறுக்கும் நடிகை நிலா
x
தினத்தந்தி 17 May 2021 1:23 AM GMT (Updated: 17 May 2021 1:23 AM GMT)

கொரோனா தொற்றில் சிக்கியவர்களுக்கு படுக்கை, ஆக்சிஜன், மருந்து வசதிகள் இல்லாதபோது நான் எதற்காக 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்? என நடிகை நிலா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் அன்பே ஆருயிரே படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலா தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, ஜகன் மோகினி, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். நிலாவின் நெருங்கிய உறவினர்கள் இருவர் கொரோனா தொற்றில் சிக்கி இறந்துள்ளனர். இதையடுத்து ஆவேசமாக சமூக வலைத்தளத்தில் நிலா வெளியிட்டுள்ள பதிவில், ‘’எனது உறவினர்கள் இரண்டு பேரை கடந்த சில நாட்களில் நான் இழந்து விட்டேன். கொரோனா தொற்றில் தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவர்கள் இறந்துள்ளனர். ஒரு உறவினருக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் படுக்கை கிடைக்கவில்லை. இன்னொரு உறவினருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதுபோல் எத்தனையோ பேர் உயிருக்கு போராடுகிறார்கள். கொரோனா தொற்றில் சிக்கியவர்களுக்கு படுக்கை, ஆக்சிஜன், மருந்துகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை. அரசுகள் மெத்தனமாக உள்ளன. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் இல்லாதபோது நான் எதற்காக 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி கட்ட வேண்டும்? என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலாவுக்கு ஆதரவாக பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Next Story