நீண்ட நாட்கள் வசிப்பதற்கான கோல்டன் விசா: இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, துபாய் அரசு வழங்கியது


நீண்ட நாட்கள் வசிப்பதற்கான கோல்டன் விசா: இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, துபாய் அரசு வழங்கியது
x
தினத்தந்தி 27 May 2021 2:05 AM GMT (Updated: 27 May 2021 2:05 AM GMT)

நீண்ட நாட்கள் வசிப்பதற்கான கோல்டன் விசாவை இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு, துபாய் அரசு வழங்கியது.

சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.இந்த விசாவை பெற பிரபல இந்திய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையின் பொது இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி, சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா வழங்கினார்.

குடும்பம்
இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமாக திகழ்ந்து வருபவர் சஞ்சய் தத் (வயது 62). 1980-ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் திரையுலகில் அறிமுகமானதில் இருந்து தன்னை ஒரு முக்கிய நட்சத்திரமாக இன்றும் திரையுலகில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.இவர் முதலாவதாக ரிச்சா ஷர்மா என்பவரை கடந்த 1987-ம் ஆண்டு திருமணம் செய்தார். துரதிருஷ்டவசமாக அவர் கடந்த 1996-ம் ஆண்டு புற்று நோயால் பலியானார். அவர்களின் மகள் திரிஷ்லா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.பின்னர், 2-வதாக ரேகா பிள்ளை என்பவரை திருமணம் செய்தார். அதுவும் கசப்பான முடிவை ஏற்படுத்தியது. தற்போது 3-வதாக தில்னவாஷ் ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மான்யதா என்று அழைக்கப்படுகிறார். இவர்களுக்கு ஷஹ்ரான் மற்றும் இக்ரா என்ற 2 
மகன்கள் உள்ளனர்.

துபாயில் வசிக்கிறார்
தற்போது சஞ்சய் தத் துபாயில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். பிறகு சஞ்சய் தத் குடும்பத்தினரை விட்டு மும்பை சென்றார். அங்கு சென்ற அவர் மீண்டும் துபாய் திரும்பவில்லை.இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி அவருக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது.அதன்பிறகு தற்போது நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி துபாய் வந்து குடும்பத்தினரை சந்தித்தார். தற்போது குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வருகிறார்.

ரசிகர்கள் வாழ்த்து
தற்போது அமீரக அரசின் கோல்டன் விசாவை பெற்றுக் கொண்ட அவர் தனக்கு இந்த விசாவை வழங்கிய அமீரக அரசுக்கும், இந்த விசாவை பெற உறுதுணையாக இருந்த பிளைதுபாய் விமான நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹமத் ஒபைதுல்லா உள்ளிட்டோருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.நடிகர் சஞ்சய் தத் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Next Story