தென்னிந்திய சினிமாவை ஆளப்போகும் ‘ஆலியா பட்’


தென்னிந்திய சினிமாவை ஆளப்போகும் ‘ஆலியா பட்’
x
தினத்தந்தி 30 May 2021 2:36 PM GMT (Updated: 30 May 2021 2:36 PM GMT)

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர், ஆலியா பட். இவர், 1980-களில் பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த மகேஷ் பட்டின் மகள் ஆவார். ஆலியா பட்டின் தாயார் சோனி ராஸ்டன். இவரும் நடிகைதான்.

மும்பையில் 1993-ம் ஆண்டு பிறந்த ஆலியா பட், 1999-ம் ஆண்டு தனது தந்தையின் தயாரிப்பில் உருவான ‘சங்ஹார்ஸ்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் அக்சய்குமார்- பிரீத்தி ஜிந்தா இருவரும், கதாநாயகன்-நாயகியாக நடித்திருந்தனர். இதில் பிரீத்தி ஜிந்தாவின் சிறுவயது கதாபாத்திரத்தில்தான் ஆலியா பட் நடித்திருந்தார்.

அதன்பிறகு 14 வருடங்கள் கழித்து, அதாவது 2012-ம் ஆண்டு பாலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனரும், மிகச் சிறந்த படங்களை தயாரித்தவருமான கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ‘ஸ்டூடன்ஸ் ஆப் தி இயர்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் சித்தார்த் மல்கோத்ரா, வருண் தவான் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து ‘ஹைவே’, ‘2 ஸ்டேட்ஸ்’, ‘உக்ளி’, ‘கபூர் அன்ட் சன்ஸ்’, ‘டியர் சிந்தகி’ ‘வெல்கம் டூ நியூயார்க்’ என இவர் நடித்த அனைத்து படங்களும் அதிக வசூலைப் பெற்றப் படங்களாகவே அமைந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே பாலிவுட் ரசிகர்களின் மனதில் ஆலியா பட் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். நடிப்பும், அழகும் ஒரு சேர்ந்து அமைந்திருந்த காரணத்தால், ரசிகர்கள் பலரும் அவரைக் கொண்டாடினார்கள்.

குறிப்பாக 2018-ம் ஆண்டு வெளியான ‘ராஸி’ திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் பாகிஸ்தான் நாட்டின் மருமகளாகச் செல்லும் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். அதோடு அவர் இந்திய நாட்டின் ரகசிய உளவாளியும் கூட. இந்திய நாட்டின் தேசப் பற்றையும், ஒரு குடும்பத்தின் மருமகளாக குடும்ப பற்றையும் தன் விழியசைவில் காட்டி நடித்திருந்த அவரது நடிப்பு பெரும்பாலானவர்களை கவர்ந்துவிட்டது.

இந்தப் படம் பாலிவுட் மட்டுமின்றி, இந்திய தேசம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆலியா பட்டுக்கு, தனி இருக்கையை அமர்த்திக் கொடுத்தது. அதே ஆண்டில் பாலிவுட்டின் அடையாளமாக பார்க்கப்பட்ட ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜீரோ’ படத்திலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை.

ஆனால் 2019-ம் ஆண்டு ரன்வீர்சிங்குடன் இணைந்து ஆலியா பட் நடித்த ‘கல்லி பாய்’ திரைப்படம், அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் வெறும் 45 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு, பாக்ஸ் ஆபீசில் ரூ.230 கோடியை வசூல் செய்தது.

இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் ஆலியா பட்டை நடிக்க வைக்கும் எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு உருவானது. அவருக்கு தென்னிந்தியாவிலும் ஏராளமான ரசிகர் பட்டா ளம் இருப்பதே அதற்கு காரணமாகும். ஆனால் பாலிவுட்டிலேயே மிகச் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த ஆலியா பட், தென்னிந்திய சினிமாவில் நடிப்பதை வெகு காலமாகவே தவிர்த்துவந்தார். இந்த நிலையில்தான், ‘பாகுபலி’ படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலமான ராஜமவுலியின் இயக்கத்தில் ரூ.400 கோடியில் உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படம் முதலில் ‘பாகுபலி’ படத்தைப் போலவே, ‘தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்’ ஆகிய 5 மொழிகளில்தான் `டப்பிங்' செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, ‘ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியன், துருக்கி, ஸ்பானிஷ், ஜப்பான், சீனா உள்ளிட்ட 12 மொழிகளில் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் ஆலியா பட், ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு உலக அரங்கில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு சினிமாவில் ராஜமவுலியின் திரைப் படத்தைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் ஆலியா பட்தான் நாயகி என்று பேசப்படுகிறது. இந்தியன்-2 பட தயாரிப்பாளருடனான பிரச்சினையில், அந்தப் படம் தள்ளிப்போய் கொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய அடுத்த படத்தை ராம்சரணுடன் இணைந்து தொடங்கும் பணியில் ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தென்னிந்தியாவில் ஆலியா பட்டின் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டதாகவே ரசிகர்கள் மத்தியில் செய்தி பரவுகிறது. இதனால் தெலுங்கில் தற்போது முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள், பதற்றத்தில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

Next Story