பாலியல் குற்றவாளிக்கு ஆதரவா? மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி


பாலியல் குற்றவாளிக்கு ஆதரவா? மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி
x
தினத்தந்தி 16 Jun 2021 1:52 AM GMT (Updated: 16 Jun 2021 1:52 AM GMT)

பாலியல் குற்றவாளிக்கு நடிகை பார்வதி ஆதரிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். முதலில் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டங்கள் எழுந்தன.

இந்த நிலையில் வேடன் பதிவை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி முதலில் ‘லைக்' செய்துவிட்டு பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும் நீக்கி விட்டார்.

இதுகுறித்து பார்வதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வேடன் மீது குற்றம்சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன். வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது 'லைக்'கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Next Story