மோசடி செய்ய முயற்சியா? விஷால் புகாருக்கு பட அதிபர் விளக்கம்


மோசடி செய்ய முயற்சியா? விஷால் புகாருக்கு பட அதிபர் விளக்கம்
x
தினத்தந்தி 18 Jun 2021 8:39 PM GMT (Updated: 2021-06-19T02:09:57+05:30)

சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

“மூன்று வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கு இரும்புத்திரை படத்தை தயாரிக்க நானும் திருப்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து பணம் கொடுத்தோம். அந்த பணத்தில் ஒரு தொகையை விஷால் பாக்கி வைத்து சக்ரா படத்தின் வெளியீட்டில் தருவதாக தெரிவித்து, பின்னர் வக்கீல் மூலமாக இரும்புத்திரை, சக்ரா படங்களுக்கான வரவு செலவு கணக்கு முடிந்துவிட்டதாக ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

இரும்புத்திரை பைனான்சுக்காக விஷால் அளித்த உறுதிமொழி பத்திரங்களை இயக்குனர் சிவகுமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன். ஆனால் சிவகுமார் இறந்துவிட்டார். பத்திரங்களை அவர் எங்கு வைத்துள்ளார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் விஷால் அந்த உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான் மோசடி செய்ய முயற்சிப்பதாக போலீசில் புகார் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி எனக்கு வேதனை அளித்தன. சிவகுமாரிடம் இருந்த உறுதிமொழி பத்திரங்கள் அவரை சார்ந்த நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ இருந்தால் அதை என்னிடமோ, விஷாலிடமோ அல்லது காவல் துறையிடமோ ஒப்படைக்கவும். அதை மீறி வைத்திருப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.'' இவ்வாறு ஆர்.பி.சவுத்ரி கூறியுள்ளார்.

Next Story