பாலிவுட்டை கலக்க காத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா


பாலிவுட்டை கலக்க காத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா
x
தினத்தந்தி 20 Jun 2021 3:00 PM GMT (Updated: 2021-06-20T20:30:58+05:30)

கர்நாடகா மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்தவர், நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் பள்ளி படிப்பை தான் பிறந்த குடகு மாவட்டத்திலும், கல்லூரி படிப்பை மைசூருவிலும் முடித்தார். 2014-ம் ஆண்டு நடந்த பெங்களூரு மாடல் போட்டியில் கலந்துகொண்ட அவர், அந்த பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலமாக கர்நாடக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கைவரப் பெற்றது.

இவர் நடித்த முதல் படம் ‘கிரிக் பார்ட்டி.’ 2016-ல் இந்தப் படம் வெளியானது. முதல் படமே மிகப்பெரிய வெற்றி. வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.50 கோடி வசூலை அள்ளியது. அதோடு இந்தப் படத்திற்கான கர்நாடக மாநில சிறந்த நடிகைக்கான விருதையும், ராஷ்மிகா மந்தனா பெற்றார்.

தெலுங்கில் 2018-ம் ஆண்டு வெளியான ‘சலோ’ என்ற படத்தில் அறிமுகமானார், ராஷ்மிகா. அதே ஆண்டில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம், அவரை தெலுங்கில் மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறினார், ராஷ்மிகா.

அழகும், நடிப்புத் திறமையும் மிகுந்த ராஷ்மிகா இந்த ஆண்டு தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தின் வெற்றி முதலே, பாலிவுட்டில் இருந்து ராஷ்மிகாவுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டேதான் இருந்தன. ஆனால் படங்களை மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கும் தன்மை கொண்டவர் ராஷ்மிகா. அதனால்தான், திரைத்துறைக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் கூட வெறும் 10 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

அந்த கதைக்கள தேர்வுதான், அவரை மிகப்பெரிய நடிகையாக மாற்றியிருக்கிறது. தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, ‘ஆடவாலு மீக்கு ஜோகர்லு’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். இதில் ‘புஷ்பா’ திரைப்படம், ‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எப்.’ போன்ற திரைப்படங்களைப் போல இரண்டு பாகமாக உருவாகி வருகிறது.

அவர் நடித்து ஒரு படம் கூட இந்தியில் வெளியாகாத நிலையில், தொடர்ந்து மூன்று பாலிவுட் படங்கள் அவரது கைவசம் இருக்கிறது. ஆம்.. தற்போது இரண்டு இந்தி படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தில் பாலிவுட்டின் இளம் கதாநாயகனான சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாகவும், ‘குட் பை’ என்ற படத்தில் அமிதாப் பச்சனுடனும் நடிக்கிறார். அதோடு பாலிவுட்டின் தயாரிப்பாளரான சாஜித் நதியாட்வாலாவும், தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

பாலிவுட்டில் ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ள இந்த மூன்று படங்களும், அடுத்த ஆண்டு (2022) தொடர்ச்சியாக வெளியாகும் என்று தெரியவருகிறது. இந்த மூன்று படங்களும் வெளியான பின்னர், ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று, இப்போதே பாலிவுட் வட்டாரத்தின் முக்கியமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

Next Story