கொரோனா 3-வது அலை தீபாவளி படங்களுக்கு காத்திருக்கும் சவால்


கொரோனா 3-வது அலை தீபாவளி படங்களுக்கு காத்திருக்கும் சவால்
x
தினத்தந்தி 11 July 2021 10:30 PM GMT (Updated: 11 July 2021 10:30 PM GMT)

கொரோனா 3-வது அலை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

கொரோனா 2-வது அலை முடிந்து 3-வது அலை தொடங்க இருக்கிறது. இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனால் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய படங்களின் கதி என்ன ஆகும் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மூடிய தியேட்டர்களை திறந்து 2-வது அலையில் மறுபடியும் மூடி விட்டனர். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தும் திரையரங்குகளை திறக்க அரசு தயக்கம் காட்டுகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 3-வது அலை உச்சமாகும்போது மூடப்படும் சூழ்நிலை ஏற்படலாம். இதனால் தீபாவளி படங்களுக்கு பெரிய சவால் காத்திருப்பதாக கருதப்படுகிறது. தியேட்டர்கள் திறந்தாலும் தீபாவளிக்கு படங்களை பார்க்க ரசிகர்கள் அச்சமின்றி வருவார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகைக்குள் 3-வது அலை பாதிப்பு குறைந்து நிலைமை சகஜமாகி விடும் என்று தியேட்டர் அதிபர்கள் நம்புகிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ளது. அஜித்குமாரின் வலிமை மற்றும் விக்ரமின் 60-வது படம் ஆகியவற்றையும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

இதுபோல் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள கங்கனா ரணாவத்தின் தலைவி, சிம்புவின் மாநாடு, விஜய்சேதுபதியின் லாபம், விஷாலின் எனிமி, நயன்தாராவின் நெற்றிக்கண் படங்களுக்கும், 30-க்கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்களுக்கும் கொரோனா 3-வது அலை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சில படங்களை ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.


Next Story