அரசு உளவு பார்க்கலாமா? கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு


அரசு உளவு பார்க்கலாமா? கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 July 2021 6:13 AM GMT (Updated: 22 July 2021 6:13 AM GMT)

நடிகை கங்கனா ரணாவத் அரசுக்கு உளவு பார்க்க உரிமை உள்ளது என்பது போன்ற சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார். இதற்கு வலைத்தளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பெகாசஸ் என்ற செயலி மூலம் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை கிளப்பி கண்டனம் தெரிவித்து உள்ளன. நடிகர் சித்தார்த்தும் செல்போன் உளவு கேட்கப்படுவதை விமர்சித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் அரசுக்கு உளவு பார்க்க உரிமை உள்ளது என்பது போன்ற சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு நிர்வாகத்தை பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அந்த காலத்தில் மன்னர்கள் ரகசியமாக ஊருக்குள் சென்று வருவார்கள். மன்னர்களுக்கு உளவு பார்க்க உரிமை இருக்கிறது. நான் பெகாசஸ் பற்றி பேசவில்லை'' என்று கூறியுள்ளார். கங்கனாவின் கருத்து சர்ச்சையை எற்படுத்தி உள்ளது. அவருக்கு வலைத்தளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Next Story