கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்' என்ற புனை பெயர்: முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ருசிகர பேச்சு


கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில் என்ற புனை பெயர்: முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ருசிகர பேச்சு
x
தினத்தந்தி 2 Aug 2021 1:11 AM GMT (Updated: 2021-08-02T06:41:01+05:30)

'விசில்' அடிப்பதில் பட்டையை கிளப்பியதால் கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்' என்ற புனை பெயர் கிடைத்தது முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ருசிகர பேச்சு.

சென்னை, 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இணையவழியாக நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக பேச்சாளரும், சிந்தனையாளருமான மஹாத்ரியா ரா, முன்னாள் மாணவரும், ஓ.பி. ஜிந்தால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான சி.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து லயோலா கல்லூரி சார்பில் முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்கியவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.பாலநாகேந்திரனுக்கு (2007-10) வழிகாட்டும் ஒளி விருதும், சி.சுப்பாரெட்டிக்கு (1974-77) வணிகத்தலைவர் விருதும், அஸ்வந்த் தாமோதரனுக்கு (1974-77) உலகளாவிய ‘‘லோயோலைட்’’ விருதும், எம்.ரசாக்குக்கு (1964-67) குடிமகன் விருதும், எஸ்.முரளிதரனுக்கு (1979-82) கொரோனா தடுப்பு வீரர் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

பின்னர், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சூர்யா பேசினார். அப்போது அவர், ‘‘முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் லயோலா கல்லூரியில் படித்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத்தெரியாது. பாடலுக்கு ‘விசில்' அடித்து நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். அதனால் என்னை ‘‘பிகில்’’ என்று கல்லூரியில் புனை பெயர் வைத்து கூப்பிடுவார்கள். தற்போதுள்ள நோய்த்தொற்று காலத்தில் அனைவரும் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’’ என்றார்.

நிகழ்ச்சியில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரும், வி.ஐ.டி. நிறுவனத்தலைவருமான ஜி.விஸ்வநாதன், முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குனரும், முதல்வருமான ஏ.தாமஸ் அடிகளார், லயோலா கல்லூரியின் அதிபர் பிரான்சிஸ் பி.சேவியர் அடிகளார், கல்லூரி செயலாளர் செல்வநாயகம் அடிகளார் உள்பட பலர்கலந்துகொண்டனர்.


Next Story