‘நான் குடித்துவிட்டு கார் ஓட்டினேன் என்பதா?’ நடிகை யாஷிகா ஆனந்த் ஆவேசம்


‘நான் குடித்துவிட்டு கார் ஓட்டினேன் என்பதா?’ நடிகை யாஷிகா ஆனந்த் ஆவேசம்
x
தினத்தந்தி 3 Aug 2021 11:07 PM GMT (Updated: 2021-08-04T04:37:12+05:30)

மது குடித்து விட்டு கார் ஓட்டினேன் என்பதா என்று விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

சென்னை, 

நடிகை யாஷிகா ஆனந்த் வேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் அவரது தோழி வள்ளிச்செட்டி பவனி பலியானார். யாஷிகா ஆனந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இப்போதுதான் தோழி இறந்த தகவலை அவருக்கு தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து யாஷிகா ஆனந்த் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், “இப்போதைய எனது மன நிலையை விவரிக்க முடியவில்லை. நான் உயிரோடு இருப்பது எப்போதும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கப்போகிறது. மோசமான விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்வதா? அல்லது எனது உயிர் தோழியை பறித்துக்கொண்ட கடவுளை பழிப்பதா? என்று எனக்கு தெரியவில்லை.

ஒவ்வொரு நொடியும் உன்னை ‘மிஸ்' செய்கிறேன் பவனி. என்னை நீ மன்னிக்க மாட்டாய் என்று தெரியும். என்னை மன்னித்து விடு. உனது குடும்பத்தினருக்கு இப்படி ஒரு மோசமான நிலையை ஏற்படுத்தி கொடுத்துவிட்டேன். ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்ச்சியுடனே வாழப்போகிறேன்.

சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். கார் ஓட்டும்போது நான் மது அருந்தி இருந்ததாக வதந்தி கிளப்புகின்றனர். நான் மது அருந்தவில்லை என்று போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். நான் குடித்து இருந்தால் இப்போது ஜெயிலில் இருந்து இருப்பேன். ஆஸ்பத்திரியில் அல்ல. போலியான நபர்கள் போலி செய்திகளை பரப்புவது நீண்ட காலமாக நடக்கிறது. ஆனால் இது உணர்வுபூர்வமான விஷயம். கொஞ்சம் மனித தன்மையும், இரக்கமும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். டாக்டர்கள் அறிக்கையும் இதைத்தான் சொல்லும்.

எனது இடுப்பு எலும்பில் முறிவுகள் ஏற்பட்டு உள்ளன. வலது காலும் முறிந்துள்ளது. இதற்காக எனக்கு அறுவை சிகிச்சைகள் முடிந்து ஓய்வில் இருக்கிறேன். அடுத்த 5 மாதங்கள் என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. படுக்கையில்தான் இருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக முகத்தில் ஒன்றும் ஆகவில்லை. இது எனக்கு மறுபிறவிதான். இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

Next Story