சினிமா செய்திகள்

விபத்து நடந்தது எப்படி? நடிகை யாஷிகா விளக்கம் + "||" + How did the accident happen? Actress Yashika Description

விபத்து நடந்தது எப்படி? நடிகை யாஷிகா விளக்கம்

விபத்து நடந்தது எப்படி? நடிகை யாஷிகா விளக்கம்
நடிகை யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழி வள்ளிச்செட்டி பவனியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து யாஷிகா ஆனந்த் கூறியதாவது:-
“எனது 6 வருட தோழியான பவனி மாடலிங் செய்து பின்னர் அதில் இருந்து விலகி வெளிநாட்டில் வேலை பார்த்தார். பெற்றோரை பார்க்க ஐதராபாத் வந்த அவர் என்னை சந்திக்க சென்னை வந்தார். ஜூலை 24-ந் தேதி இரவு நாங்கள் நான்கு பேர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் உணவு சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் சென்னை திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. காரை நான்தான் ஓட்டினேன். கண்டிப்பாக நான் வேகமாக ஓட்டவில்லை. சாலை இருட்டாக இருந்ததால் துரதிர்ஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பில் காரை மோதி விட்டேன். மோதிய வேகத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து மூன்று தடவை உருண்டது. எனக்கு அருகில் இருந்த பவனி சீட் பெல்ட் அணியாமல் காற்று வாங்க ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்து இருந்ததால் விபத்து ஏற்பட்டதும் ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. மற்ற மூன்று பேரும் காருக்கு உள்ளேதான் இருந்தோம். கார் கதவு பூட்டி இருந்ததால் எங்களால் வெளியே வர முடியவில்லை. பிறகு கண்ணாடியை உடைத்து வெளியே வந்தோம். சில நிமிடங்களில் கூட்டம் கூடியது. என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டோம். நான் குணமடைந்த பிறகே பவனி இறந்த தகவலை சொன்னார்கள். நான் அன்றைய தினம் குடிக்கவில்லை. எந்த வித போதை பொருளையும் பயன்படுத்தவும் இல்லை. எதிர்பாராமல் நடந்த விபத்து. அதற்கு முழு பொறுப்பும் நான்தான். குற்ற உணர்ச்சியோடுதான் இனி வாழவேண்டும். நான் பிழைத்து இருக்க கூடாது.''

இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.