இயக்குனரான அனுபவம் பகிர்ந்த அரவிந்தசாமி


இயக்குனரான அனுபவம் பகிர்ந்த அரவிந்தசாமி
x
தினத்தந்தி 12 Aug 2021 11:12 AM GMT (Updated: 2021-08-12T16:42:58+05:30)

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அரவிந்தசாமி. தளபதி, ரோஜா, பம்பாய், மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் வில்லனாக வந்தார். ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள தலைவி படத்தில் எம்.ஜி. ஆராக நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான நவரசா ‘ஆந்தாலஜி’ வகை திரைப்படத்தில் ரவுத்திரம் என்ற கதையை இயக்கி டைரக்டராகவும் அறிமுகமாகி உள்ளார்.

இயக்குனரான அனுபவம் குறித்து அரவிந்தசாமி கூறும்போது, “1990-களின் தொடக்கத்தில் இருந்தே படம் இயக்க எனக்கு ஆர்வம் இருந்தது. மணிரத்னம் மூலம் நவரசாவில் டைரக்டராகி உள்ளேன். படைப்பை உருவாக்குவதில் எந்த சந்தேகமோ, தயக்கமோ எனக்கு இல்லை. பல வருடங்களாக திறமையான இயக்குனர்களிடம் நான் பணிபுரிந்ததுதான் அதற்கு காரணம். நான் இயக்கிய படைப்புக்கு பாராட்டுகள் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார். அடுத்து புதிய திரைப்படம் ஒன்றை அரவிந்தசாமி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story