நடிகராவதற்கு பட்ட கஷ்டங்கள் ஆர்யா உருக்கம்


நடிகராவதற்கு பட்ட கஷ்டங்கள் ஆர்யா உருக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:03 AM GMT (Updated: 13 Aug 2021 11:03 AM GMT)

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா, நடிகராக பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்தார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது.

“சிறிய வயதில் நான் ஒல்லி குச்சியாக இருப்பதாக சொல்லி காதலை ஒரு பெண் முறித்ததால் 16 வயதில் ஜிம்முக்கு போய் உடம்பை முறுக்கேற்றினேன். அப்பாவுக்காக கம்ப்யூட்டர் என்ஜினியரிங் முடித்து ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எனது உடம்பு திடமாக இருந்ததால் மாடலிங் செய்பவர்கள் அழைத்து பின்னால் கூட்டதோடு நிற்க வைத்து நூறு ரூபாய் கொடுத்தனர். அது கை செலவுக்கு உதவியது. பிறகு ஒரு படத்தில் சிறிய வில்லன் வேடமும், இயக்குனர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன.

படப்பிடிப்பில் எனக்கு நடிப்பும், சிரிப்பும் வரவில்லை என்று ஜீவா எரிச்சலாகி திட்டினார். ஒரு காட்சிக்கு 30, 40 டேக் எடுத்தேன். இதனால் நடிக்காமல் ஓடிப்போய் விடலாம் என்று நினைத்தேன். உதவி இயக்குனர் தடுத்தார்.

அதன்பிறகு பயிற்சி எடுத்து நடித்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றேன். அந்த படத்துக்கு பிறகு தலை எழுத்தே மாறிவிடும் என்று நினைத்தேன். ஆனால் அது ரிலீசாக 3 ஆண்டுகள் தாமதம் ஆனதால் யாரும் நடிக்க அழைக்கவில்லை.

வாய்ப்பு தேடி ஸ்டுடியோக்களில் சுற்றி அவமானங்களை சந்தித்தேன். எந்த பின்னணியும் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அப்போது புரிந்தது. 2 வருட அலைச்சலுக்கு பிறகு விஷ்ணுவர்த்தன் அறிந்தும் அறியாமலும் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பட்டியல் படமும் கிடைத்தது. அதன்பிறகு உள்ளம் கேட்குமே படமும் வந்தது மூன்றும் வெற்றி பெற்றதால் படங்கள் குவிந்தன. பாலாவின் நான் கடவுள் படத்துக்காக காசியில் மயானத்தில் இருந்து அகோரி வேடத்துக்கு பயிற்சி எடுத்து நடித்தேன். 2018-க்கு பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் இப்போது சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி பெயர் வாங்கி கொடுத்துள்ளது.'' இவ்வாறு ஆர்யா கூறினார்.

Next Story