விக்னேஷ் சிவனை காதலிப்பது ஏன்? நடிகை நயன்தாரா விளக்கம்


விக்னேஷ் சிவனை காதலிப்பது ஏன்? நடிகை நயன்தாரா விளக்கம்
x
தினத்தந்தி 17 Aug 2021 4:16 AM GMT (Updated: 2021-08-17T09:46:39+05:30)

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர்.

நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர். விக்னேஷ் சிவனை காதலிப்பது ஏன் என்பது குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

‘எனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் குடும்பத்தினரை மட்டும் வைத்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. திருமணத்தை எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் நடத்துவோம். காதலில் விட்டுக்கொடுப்பது, நம்பிக்கை, அக்கறை எல்லாம் இருக்க வேண்டும். விக்னேஷ் சிவனிடம் பிடித்தது பிடிக்காதது என்று இல்லை. அவரிடம் எல்லாமே எனக்கு பிடிக்கும்.

இதுவரை நான் பார்த்த ஆண்கள் எல்லோரும் பெண்கள் வளர்ச்சியை எப்படி தடுப்பது என்றும், பெண்களை குடும்ப தலைவியாக மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பவர்களாக உள்ளனர். பெண்களால் குடும்பத்தை கவனிக்க முடியும். குழந்தைகளை வளர்க்க முடியும். வேலைக்கும் செல்ல முடியும்.

விக்னேஷ் சிவனால் எனது வேலையை இன்னும் சிறப்பாக செய்கிறேன். நடிகையாக எனது முன்னேற்றத்தில் அவர் அதிக அக்கறை காட்டுகிறார். அன்பை உணர செய்கிறார். எதையும் அவரிடம் அனுமதி வாங்கி நான் செய்வது இல்லை.

பெண்களுக்கு திருமணம் என்பது அவரவர் சொந்த முடிவாக இருக்க வேண்டும். பெற்றோரும், மற்றவர்களும் சொல்வதை கேட்கக்கூடாது. கொரோனா எனக்கு அமைதியையும், பொறுமையையும் கற்றுக்கொடுத்துள்ளது. நிறைய பேர் இந்த தொற்றால் பாதித்துள்ளனர். வேலை இழந்துள்ளனர். ஆனாலும் நான் பிடித்த வேலையை தொடர்ந்து செய்வது ஆசிர்வாதம்.

கிசுகிசுக்களை பார்த்து ஆரம்பத்தில் அழுதது உண்டு, இப்போது கண்டுகொள்வது இல்லை. ரோட்டோர கடைகளில் யாருக்கும் தெரியாமல் போய் பிரியாணி சாப்பிடுவது வழக்கம். நான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு செல்வது இல்லை என்று சொல்வது தவறு. எல்லா படங்களையும் விளம்பரப்படுத்தி உள்ளேன். ஆனால் இது நல்ல படம். எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் போய் பாருங்கள் என்று சொல்லமாட்டேன்.''

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Next Story