மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது


மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விருது
x
தினத்தந்தி 20 Aug 2021 10:12 AM GMT (Updated: 20 Aug 2021 10:12 AM GMT)

சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகளை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வென்றுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா 2021-ல் விருதுகளை வென்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்படங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருது அறிவிப்பு நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

இதில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. 

திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பும், சுதா கொங்கராவின் இயக்கமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. 

இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டது. இதில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூரரைப் போற்று திரைப்படத்திற்கு சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் ‘சூரரைப் போற்று’ திரைப்பட குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story